image: Masjid Al Nabawi (சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு)
01. மதீனாவில்
நபியவர்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் அல்லாஹ் மதீனாவை மிகப்பெரும் அருட்கொடையாக வழங்கினான். மக்காவில் கொடிய மனம் கொண்டவர்களால் அனுபவித்த வேதனைகளும் கொடுமைகளும் ஓரளவு முடிவுக்கு வந்தன.
இஸ்லாத்தின் தலைமை பீடமாக மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் கட்டப்பட்டது. இரு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமாக இருந்த அந்த பூமி பணம் கொடுத்து வாங்கப்பட்டு ஸஹாபாக்களும் நபியவர்களும் தோளோடு தோள் சேர்ந்து உழைத்து மஸ்ஜிதுன் நபவி எளிய வடிவத்தில் உருவாக்கப்பட்டது. அதன் ஒரு பக்கம் மக்காவில் இருந்து வந்த முஹாஜிர்கள் தங்க திண்ணையும் மறுபக்கம் உம்மஹாதுல் முஃமீன்களுக்கு சில இருப்பிடங்களும் கட்டப்பட்டன.
கண்மணி நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் மதீனாவில் நிம்மதியாக வாழ்வது மக்காவின் குறைஷிக் காபிர்களுக்குப் பிடிக்கவில்லை. அதேபோன்று மதீனாவைச் சூழ வாழ்ந்திருந்த யூதக்கோத்திரங்களும் இஸ்லாத்தின் வளர்ச்சியை விரும்பவில்லை. அரேபியாவின் அகன்ற பாலைவனங்களில் வாழ்ந்துகொண்டிருந்த நாடோடிக்கோத்திரங்களும் இஸ்லாத்தை எதிர்த்தன. அதேபோன்று மதீனாவுக்குள் வாழ்ந்துகொண்டிருந்த சில முனாபிக்குகளும் அடிக்கடி தொந்தரவு கொடுத்தனர். ஆகவே, நபியவர்களும் ஸஹாபாக்களும் எப்போதும் தம்மை தற்காத்துக்கொள்ள விழிப்புடன் செயற்பட வேண்டி இருந்தது.
நபியவர்களையும் முஸ்லீம்களையும் அழிக்க வேண்டும் என நினைத்த மக்கா காபிர்கள் பல போர்களைத் தொடுத்தனர். அவற்றுள் பின்வரும் போர்கள் முக்கியமானவை
02. பத்ர் போர்
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு மக்காத்தலைவராக அபூசுப்யான் மிகப்பெரிய வணிகக் கூட்டத்துடன் சிரியா நோக்கி சென்றுகொண்டிருந்தார். முஸ்லிம்கள் அந்த கூட்டத்தை தாக்கப்போகின்றார்கள் என நினைத்த மக்காவில் பிரபல தலைவர்களான அபூஜஹ்ல், உத்பா, ஷைபா போன்றவர்கள் ஆயிரம் வீரர்களை அழைத்துக்கொண்டு மதீனாவை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்களிடம் போதிய படை பலமும் கவச ஆடைகளும் நிறைந்திருந்தன. இதனைக் கேள்விப்பட்ட நபியவர்களும் தம்மை பாதுகாக்கும் நோக்கோடு முந்நூற்றுப் பதின் மூன்று தோழர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்கள். முஸ்லிம்களிடம் போதிய அளவு ஆயுதங்களோ வாகனங்களோ இருக்கவில்லை.
அன்று ரமழான பதினேழாம் நாள்
இரண்டு படைகளும் பத்ர் என்று சந்தைப்பகுதியில் சந்தித்துக்கொண்டார்கள். போர் ஆரம்பமானது. மக்காவின் படை ஆணவத்தோடும் மதீனத்துப் படை அல்லாஹ் மீதான ஆதரவோடும் போராடியது. அல்லாஹ்வும் முஸ்லிம்களுக்கு தனது வானவர்களை அனுப்பி உதவி செய்தான். இதனால் முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. மக்கா காபிர்களில் அபூஜஹ்ல் போன்ற முக்கிய தலைவர்கள் உட்பட 70 பேர் மரணமடைய முஸ்லிம்களில் 14 பேர் கொல்லப்பட்டார்கள். இன்னும் 70 மக்காவாசிகளை முஸ்லிம்கள் சிறை பிடித்தனர்.
அவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட கைதிகளை முஸ்லிம்கள் தமது விருந்தாளிகள் போலவே நடத்தினர். அவர்களில் சிலர் பணம் கொடுத்து விடுதலை பெற பெரும்பாலானவர்கள் மதீனா குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்துவிட்டு விடுதலையானார்கள்.
03. உஹத் போர்
பத்ர் போரின் மிக மோசமான தோல்வியை மக்காவாசிகளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆகவே, அடுத்த வருடமான ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு அவர்கள் மூவாயிரம் பேர்கொண்ட மிகப்பெரும் படையுடன் புறப்பட்டு வந்தார்கள். நபியவர்களும் அவர்களை எதிர்த்து தம்மை தற்பாதுகாத்துக்கொள்ள ஆயிரம் பேர் கொண்ட படையுடன் புறப்பட்டுச்சென்றாலும் அந்தப் படையில் கலந்திருந்த நயவஞ்சகர்களான 300 பேர் வேறு காரணங்களைக் கூறி இடைவழியில் விலகிச்சென்றுவிட முஸ்லிம்களின் படையில் 700 வீரர்கள் மாத்திரமே நின்றனர்.
இரண்டு படைகளும் உஹத் மலையடிவாரத்தில் முகாமிட்டனர்.
யுத்தத்தைப் பற்றி ஆழமாக திட்டமிட்ட முஹம்மத் (ஸல்) அவர்கள் ஐம்பது பேர் கொண்ட சிறிய படைப்பிரிவை உஹத் மலையில் நிற்க வைத்து எக்காரணம் கொண்டும் அவர்கள் கீழே இறங்கிவரவே கூடாது என கண்டிப்பாக கட்டளையிட்டார்கள்.
யுத்தம் ஆரம்பமானது.
ஆரம்பத்தில் முஸ்லிம்களின் கை ஓங்கியது. அதனால், அஞ்சிய எதிரிப்படையினர் தமது ஆயுதங்களையும் உடைமைகளையும் அதே இடத்தில் போட்டுவிட்டு ஓட்டமெடுத்தனர். இதனைக் கண்டு அவசரப்பட்ட மலையில் நிறுத்தி வைக்கப்பட்ட முஸ்லிம் வீரர்களில் ஒரு பகுதியினர் நாம் யுத்தத்தில் வெற்றியடைந்துவிட்டோம் என கருதி இறங்கிவிட்டனர். இதனை அவதானித்த எதிரிப்படையின் குதிரைப்படைக்கு தலைமை வகித்த காலித் பின் வலீத் மலையை சுற்றி வந்து முஸ்லிம்களை தாக்கினர். முன்னாலும் பின்னாலும் எதிரிகளால் சூழப்பட்ட முஸ்லிம் படை கடுமையான இழப்பை சந்தித்தது. நபியர்களுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. ஹம்ஸா (ரழி), முஸ்அப் (ரழி) போன்ற ஸஹாபாக்கள் உற்பட 70 ஸஹாபாக்கள் கொல்லப்பட்டனர்.
எதிரிகளிலும் முப்பத்தியேழு வீரர்கள் இறந்திருந்தனர்.
04. அகழ் போர்
உஹத் போரில் முஸ்லிம்கள் ஓரளவு தேசங்களை அனுபவித்திருந்தாலும் அவர்களை முற்றாக அழிக்க முடியவில்லையே என்ற கவலை மக்காவின் குறைஷிக் காபிர்களை வாட்டி வதைத்தது. ஆகவே, அவர்கள் அபூசுப்யானின் தலைமையில் சுமார் பத்தாயிரம் வீரர்களைக்கொண்ட மாபெரும் படை ஒன்றை தயார் செய்தார்கள்.
வழமை போல நபியவர்கள் தமது தோழர்களை ஒன்றுகூட்டி யுத்தம் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இப்போது ஸல்மான் அல் பாரிஸி (ரழி) அவர்களின் ஆலோசனைப் படி மதீனாவைச் சூழ அகழ் தோண்டப்பட்டது.
இதனால் இப்போர் அகழ்ப்போர் – கந்தக் யுத்தம் என அழைக்கப்படுகின்றது. அகழைத்தாண்டி குறைஷஷpக் காபிர்களால் உள்ளே வரமுடியவில்லை. அதேவேளை அல்லாஹ் அனுப்பிய புயல் காற்றும் அவர்களுக்கு மிகப்பெரிய வேதனையை வழங்கியது. அதேபோன்று முஸ்லிம்களும் பசியாலும் கடும் குளிராலும் பல வேதனைகளை அனுபவித்தார்கள். இறுதியாக, முழுத்தயாரிப்புடன் இருக்கும் முஸ்லிம்களை வெற்றிகொள்ள முடியாது என முடிவெடுத்த காபிர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
அதற்குப் பிறகு அவர்கள் மதீனாவை நோக்கி படையெடுப்பதைப் பற்றி சிந்திக்கவேயில்லை.
இந்தக் காலப்பகுதியில் நபியவர்கள் பல மன்னனர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி அறிமுகம் செய்து பல கடிதங்களை எழுதினார்கள். பல தூதுவர்களையும் அனுப்பினார்கள்.
ரோம அரசராகிய ஹிர்கல் மன்னருக்கு நபியவர்கள் திஹ்யத்துல் கல்பீ (ரழி) என்பவரிடம் அழைப்புக் கடிதத்தைக்கொடுத்து அனுப்பினார்கள். அந்த மன்னர் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் தூதுவரை கௌரவித்து பல பரிசில்களை கொடுத்து அனுப்பினார். அதேபோன்று அபீசினிய மன்னர் நஜ்ஜாசிக்கும் அம்ர் இப்னு உமைய்யா (ரழி) மூலமாக கடிதம் ஒன்றை அனுப்ப மன்னரும் உடனடியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். எகிப்து நாட்டு மன்னரான முகவ்கிஸ்கும் நபியவர்கள் ஹாத்திப் இப்னு அபீபல்த்தஆ (ரழி) மூலமாக கடிதத்தை அனுப்பினார்கள். அந்த மன்னரும் இஸலாத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பல பரிசுப்பொருட்களை நபியவர்களுக்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு பல பகுதிகளுக்கும் பல தூதுவர்கள் கடிதங்களைச் சுமந்து சென்றனர்.
அல்லாஹ் தன்னை நம்பிய யாரையும் கைவிடுவதில்லை. பொறுமையோடும் தொழுகையோடும் அவனிடம் எதிர்பார்ப்பு வைக்கும் எவரையும் ஏமாற்றுவதில்லை. இத்தனை கால போராட்டங்களுக்குப் பின்னர் ஒரு முடிவு வந்தது. நபியவர்களும் ஸஹாபாக்களும் மக்காவை கைப்பற்றினர்.
மதீனாவில் இருந்த முஸ்லிம்களின் படை ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ஆண்டு மக்காவை கைப்பற்றியது. முஹம்மத் (ஸல்) அவர்கள் கொடிய எதிரிகள் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரையும் மன்னித்தார்கள்.
நபியவர்களும் அவர்களது ஸஹாபாக்களும் ஒன்றிணைந்து கஃபாவை சுத்தம் செய்தனர்.
வினாக்கள்
- பத்ர் யுத்தம் ஏன் இடம்பெற்றது?
- பத்ர் யுத்தத்தில் கைது செய்யப்பட்ட கைதிகளை முஸ்லிம்கள் எவ்வாறு நடத்தினார்கள்?
- உஹத் யுத்தம் எப்போது இடம்பெற்றது?
- அகழ் தோண்ட ஆலோசனை வழங்கிய ஸஹாபி யார்?
- மக்கா நகரம் எப்போது கைப்பற்றப்பட்டது?
05. இறுதிப் பேருரை (சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு)
ஹஜ் எனும் இஸ்லாத்தின் இறுதிக்கடமை ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. ஆகவே முதற் குழுவாக நபியவர்கள் அபூபக்கர் (ரழி) அவர்களின் தலைமையில் குழுவொன்றை மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள். அதற்கு அடுத்த வருடம் – ஹிஜ்ரி பத்தாம் வருடம் தனது தோழர்களை அழைத்துக்கொண்டு ஹஜ்ஜுக்குச் சென்று கடமையை நிறைவேற்றினார்கள். அதேபோன்று அரபா மைதானத்தில் அனைத்துத்தோழர்களையும் அழைத்து மாபெரும் உரை ஒன்றை நிகழ்த்தினார்கள். இந்த உரைதான் வரலாற்றின் ஹஜ்ஜதுல் வதா – இறுதிப்பேருரை என கௌரவிக்கப்படுகின்றது.
இந்த உரையில்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது தூதுவத்தின் சுருக்கத்தை முன்வைத்தார்கள்.
முஸ்லிம்கள் ஒருவொருக்கொருவர் உயிர், பொருள், மானம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள்.
கொலைக்காக பழி தீர்ப்பதையும் வட்டியையும் தடை செய்தார்கள்.
தனக்குப் பின் எந்தவொரு நபியும் வர மாட்டார்கள் என அறிவித்தார்கள்.
மனிதர்களுக்கிடையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பாகுபாடு காட்டுவதை தடை செய்தார்கள்.
இறைவன் ஒருவன்தான் என்பதை பற்றிப் பிடிக்குமாறு கூறினார்கள்
அநீதி இழைப்பதைப் பற்றி எச்சரித்தார்கள்
‘மக்களே நீங்கள் அல்குர்ஆனையும் எனது வழிமுறையையும் பின்பற்றி நடக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்’என கூறினார்கள்.
இறுதியாக, நபியவர்கள் வானத்தின் பக்கம் திரும்பினார்கள். ‘யா அல்லாஹ் நான் உனது தூதை எத்தி வைத்து விட்டேன் என்பதற்கு நீயே சாட்சியாக இரு’ என இறுதிமொழி கூறினார்கள்.
வினா
- நபியவர்கள் தனது இறுதிப் பேருரையின் போது செய்த அறிவுரைகள் 5 தருக
- 06. நபியவர்களின் மரணம்
ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு. ஸபர் மாதம் நபியவர்களுக்கு கடுமையான தலைவலியும் காய்ச்சலும் ஏற்பட்டது. அந்த நோய் அடுத்த 13 அல்லது 14 நாட்கள் நீடித்தது.
நாட்கள் நகர நகர நபியவர்களின் நோயின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே சென்றது. மதீனா நகரம் சோகத்தில் மூழ்கியது. முஹம்மத் (ஸல்) அவர்கள் தனக்குப் பதிலாக அபூக்கர் (ரழி) அவர்களை தொழுகையின் இமாமத் பொறுப்புக்கு நியமித்தார்கள். மதீனா மக்கள் தமது உயிர் தம்மை விட்டுப் பிரியும் வலியை அனுபவித்தார்கள்.
நபியவர்கள் தனது நோயின் கடுமை கூடக்கூட தமது எஞ்சிய கடமைகளை நிறைவேற்றத் துவங்கினார்கள். இணை வைப்பின் பக்கம் மீண்டு விடக்கூடாது என மக்களை எச்சரித்தார்கள். பெண்களின் உரிமை விசயத்திலும் தொழுகை விடயத்திலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு அறிவுரை பகர்ந்தார்கள்.
இறுதியாக,
ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 – நபியவர்கள் தனது இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்த உலகத்தில் இருந்து விடைபெற்றார்கள். அப்போது அவர்களின் வயது 63ஆக இருந்தது. (அல்லாஹ்விடமிருந்தே வந்தோம். அவனிடமே திரும்பிச்செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம்)
நபியவர்கள் ஆயிஷா நாயகியின் வீட்டிலேயே அடக்கமும் செய்யப்பட்டார்கள்.
சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு




Leave a Reply