ரமலான் சிறுகதை – ஹஸனியா இர்பான்
தர்கா நகர்.
"சப்ராஸ் எங்கட வீட்டுல இருபத்தொன்பதாம் நோன்புக்கு ஒவ்வொரு வருஷமும் நோன்பு திறக்க வைக்கிற தெரியும் தானே! கட்டாயம் நீயும் வா! நான் எங்கட பிரண்ட்ஸ் மார் ஜஹான், ரையான், சமீர், முஸ்தாக், மக்பூல் எல்லோருக்கும் சொல்லி இருக்கேன்"
முன் வீட்டு ரபீக் ஹாஜியாரின் மகன் உமர் அழைப்பு விடுத்த போது” இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்” வாய்க்குள் முணுமுணுத்தான் சப்ராஸ்.
ரபீக் ஹாஜியார் ஊரில் மிகப் பெரிய பணக்காரர். மூன்றடுக்கு மாடி வீடு, பெரிய மதில்: மூன்று கார்கள் வீட்டின் முன். செல்வம் கொழிக்கும் வீடு. ஆனால் உமரோ மிகவும் எளிமையானவன்.எல்லோரிடத்திலும் அன்பாக பழகுவான். ஏழை, பணக்காரன் பேதம் பார்க்க மாட்டாள். மிகவும் தைரியசாலி. நியாயம் என்று பட்டால் யாரையும் எதிர்த்துப் பேசுவான்.
வழமையாக இருபத்தேழாம் நோன்பு என்றால் ரபீக் ஹாஜியாரின் வீட்டின் முன் நீண்ட க்யூ வரிசை. சஹர் செய்ததோடு கியூ நிறைய தொடங்கி விடும்.ரபீக் ஹாஜியார் குளித்து ரெடியாகி வர எப்படியும் பத்து மணியாவது ஆகும். அதுவரை வியர்வை ஆறாக ஓட வெயிலில் வெந்து தவிப்பார்கள் அவ்வூர் மக்கள். ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் வீதம் ஹாஜியார் கொடுப்பதால் பிற ஊர்களில் இருந்தும் ஆட்கள் வருவார்கள்.
ஆனால் இவ்வருடம் ஒரு அதிசயம் இருபத்தேழாம் நோன்பு அன்று வீதி அமைதியாக இருந்தது. நீண்ட க்யூ வரிசையை காணவில்லை." என்ன நடந்திருக்கும்?" 'வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்குமோ?" சப்ராஸ் மனம் குழம்பினான். இந்த ரமலானுக்கு கொடுப்பதில்லை என்று அறியாத அப்பாவிகள் சிலர் பூட்டிய கேட்டையே பார்த்த வண்ணம் காத்திருந்தனர். ஆனால் அன்று மாலை வரையில் கேட் திறக்கப்படவில்லை. காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
அன்று நோன்பு இருபத்தொன்பது. உமரின் வீட்டுக்குப் போவதா? இல்லையா? என்று நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆலோசித்துக் கொண்டனர்.
"மச்சான் முஸ்தாக் நோன்பு திறக்கப் போவோமா? பெரிய பெரிய பணக்கார ஆட்கள் எல்லாம் வருவாங்க. வழமையாக அப்படித்தானே. இந்த அசல் மனுசரக் கூட கூப்பிடுறது இல்லையே. எனக்கென்றால் போக ஒரு மாதிரி இருக்கு"
” இல்ல மச்சான் நாங்க போவோம். உமர் எங்கட குட் ஃப்ரண்ட் இல்லையா? அவன்ட முகத்துக்கு சரி போயிட்டு வருவோம்”
சப்ராஸின் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர்.
" சரி மச்சான் வாங்க எல்லோரும் போய் ஹெல்ப் பண்ணுவோம்" என்று கூறிய நண்பர்கள் பத்து மணி அளவில் உமரின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகள் தடல் புடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. பெரிய டென்ட் அடித்து மேசைகள் போடப்பட்டிருந்தன. பின்புறத்தில் பிரியாணி சமைக்கும் வாசம் மூக்கைத் துளைத்தது.
நண்பர்கள் அனைவரும் ஓடியாடி வேலை செய்து எல்லா ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்தனர். நோன்பு திறக்கும் நேரம் நெருங்கும் போது ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். பெரிய பணக்காரர்கள் கார்களிலும் வேன்களிலும் சொகுசு வாகனங்களிலும் வருவார்கள் என்று எதிர்பார்த்ததுக்கு மாறாக நோன்பு திறக்க வருப்பவர்களை கண்டு நண்பர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
மரமேறும் பைசர் நானா, மீன் வியாபாரி நசார் நானா, சரூக் மாஸ்டர், மைமூனா தாத்தா என அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள் பலர் வர ஆரம்பித்தனர். ஊரில் உள்ள இது போன்ற ஏழைகள் பலரால் நிரம்பி வழிந்தது அந்த இடம்.
பாங்கு சொன்னதும் மனநிறைவோடு எல்லோரும் நோன்பு திறக்க ஆரம்பித்தனர். எல்லோரும் நோன்பு திறந்து முடிந்ததும் உமர் எழுந்து நின்று பேசத் தொடங்கினாள்.
"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ இந்த வருஷம் நோன்பு இருப்பதேழில் ஏன் வழமையாக கொடுக்கிற மாதிரி சல்லி பங்கிடல்ல என்று எல்லோரும் குழம்பி இருப்பீங்க. ஒவ்வொரு வருஷமும் இப்படி சல்லி கொடுக்கிற நேரம் நோன்பு பிடித்துக் கொண்டு வேகாத வெயில்ல எல்லோரும் கால் கடுக்க காத்துக்கொண்டிருக்கிறதை பார்த்து பலமுறை நான் மனம் வெம்பி இருக்கிறேன்.
" இந்த முறை நான் வாப்பாவோடு பேசினேன்.ஸக்காத் கொடுக்கும் முறை பற்றி குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை வாப்பாவுக்கு எடுத்துக் கூறினேன். அவரும் தான் செய்த தவறை உணர்ந்திட்டார். இன்று நான் உங்களில் கொஞ்சம் பேர தெரிவு செய்து ஸக்காத் பணத்தை பிரயோசனமாக கொடுக்கணும் என்று முடிவு செய்தேன். அவர்கள் இன்ஷா அல்லாஹ் ஸதகா, ஸக்காத் கேட்டு இனி யார் வீட்டு வாசலிலும் நிற்கக்கூடாது. அடுத்த வருஷம் இன்னொருவருக்கு கொடுத்து உதவி செய்த நிலைமைக்கு வரனும் என்று துவா செய்கிறேன்"
"சரூக மாஸ்டர் உங்க எல்லோருக்கும் இவரப் பத்தி தெரிஞ்சிருக்கும். ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். ஐந்து பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறார். இன்னும் ஒரு மகளுக்கு ஏனும் திருமணம் செய்து கொடுக்கல்ல. அவர் வீட்டில் சிறிதாக செய்து கொண்டிருக்கிற சில்லறை கடையை விரிவு படுத்தி வியாபாரம் செய்வதற்காக இந்த மூன்று லட்சம் ரூபாவை அவருக்கு கொடுக்கிறேன்" சரூக் மாஸ்டரின் கையில் ரபீக் ஹாஜியார் பணத்தை கொடுத்தபோது அல்லாஹு அக்பர் என்ற ஏகோபித்த குரல் ஓங்கியது.
'அடுத்தது பைசர் நானா. மரம் ஏறி தேங்காய்களைப் பறித்து நேர்மையாக கடுமையாக உழைத்தவர். அவருடைய பதினைந்து வயதிலிருந்து இந்த தொழில செய்கிறார். சென்ற வருடம் மரத்திலிருந்து விழுந்ததால மரமேறுர தொழில செய்ய முடியாமல் ஊன்றுகோலோடு நடக்கிறவர். அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் என்றாலும் யாரும் தொழில் செய்ற வயச இன்னும் அடையல்ல. பைசர் நானா பிள்ளைகளை வளர்க்கப்படுகிற பாட்டை ஒரு வருஷமா பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். அவருக்கு மரக்கறி வியாபாரம் செய்வதற்காக இந்த மூன்று லட்சம் ரூபாய் கொடுக்கிறேன்" மீண்டும் அல்லாஹ் அக்பர் என்ற தக்பீர் முழங்கியது.
"அடுத்தது மைமூனா தாத்தா. கணவனை இழந்த விதவை. நான்கு பிள்ளைகளோடு கஷ்டப்படுகிறார். ஒரு ஓட்டை மெஷினை வைத்துக் கொண்டு உடுப்புகளை தச்சு கொடுத்து வாழுறா. அவர்க்கு இந்த ஜுக்கி மெஷினையும் ஓலக் மெசினையும் மகிழ்ச்சியோடு கொடுக்கிறேன்"
இவ்வாறு அவ்வூரில் மிகவும் தேவை உடையவர்களை இனம் கண்டு சரியான முறையில் உதவி செய்த உமரை ஏழை உள்ளங்கள் வாழ்த்தின. உமரினது முயற்சியை கண்டு நண்பர்களின் உள்ளங்கள் மகிழ்ந்தன.ரபீக் ஹாஜியாரின் மனமாற்றம் இந்த ஊருக்கு ஒரு வரப்பிரசாதம். பல ஏழை உள்ளங்களுக்கு இந்த ரமலான் நல்லதோர் விடியலாக அமைந்ததால் ஏழை உள்ளங்கள் பூரித்தன. இந்த மனமாற்றம் தொடர அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்தனர்.
" நாட்டின் பல பாகங்களிலும் தலைப்பிறை தென்பட்டதால் நாளைய தினம் பெருநாள் தினமாக அறிவிக்கப்படுகிறது"
வானொலியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியை தொடர்ந்து பள்ளிகளில் தக்பீர் முழங்க ஆரம்பித்தது. ரபீக் ஹாஜியாரின் கைகளைப் பற்றி குலுக்கிய நண்பர்கள் உமரை கட்டியணைத்தனர். மகிழ்ச்சியோடு பெருநாளை வரவேற்க அனைவரும் தயாராகினர்.
ஹஸனியா இர்பான்
தர்கா நகர்.




Leave a Reply