அத்தியாயம் 08. Tamil Novel
பத்து மாதங்கள் கடந்து விட்டன.
இருட்டுக்குள் ஒளிந்து கொண்டிருந்தது இரவு
வாப்பாவின் சேர்ட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடந்தாள் அம்னா. தூக்கமே போகவில்லை. கண்ணை மூடினாலே வாப்பாவின் சிரித்த முகம் எட்டிப் பார்த்தது. கண்களைத் திறந்தால் அஸ்ஜத்தின் அகோரப் பார்வை நினைவில் எட்டிப் பார்த்து அவளை சித்திரவதை செய்தது.
நேற்றுத்தான் கடன்காரன் ஒருவன் வந்து கண்ட மாதிரி திட்டி விட்டுப் போயிருந்தான். இன்னும் இரண்டு வாரத்திற்குள் வாங்கிய கடனைத் தராவிட்டால் கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு துரத்துவதாகச் சொல்லி உறுமியிருக் கொண்டிருந்தவனை சத்தம் கேட்டு வெளியே வந்த ராசிக் மச்சான்தான் ஏதேதோ சொல்லி அனுப்பி வைத்திருந்தான்.
இதற்கு மேலும் கடன் கேட்க யாருமில்லை. ராசிக் மச்சான் தேவையை உணர்ந்து அடிக்கடி உதவிக் கொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் அவரிடம் எதிர்பார்க்க முடியாதே… தனக்குத் தெரிந்தவர்களிடமும் தனது தோழிகளிடமும் ஏதாவது வேலை இருந்தால் சொல்லும்படி சொல்லியிருந்தாள். ஆனால், இதுவரை எந்தச் செய்தியும் வந்து சேரவில்லை.
வாப்பா இருக்கும்போது அடிக்கடி எட்டிப் பார்த்த, வாப்பாவிடமிருந்து எத்தனையோ உதவிகளைப் பெற்ற எத்தனையோ சொந்தக்காரர்களை வாப்பாவின் மௌத்துக்குப் பின் காணமுடியவில்லை. பாதையில் தெரியாத்தனமாக கண்டுவிட்டால் கூட ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லிவிட்டு அவசர அவசரமாக நழுவிப் போனார்கள்.
தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அம்னாவுக்கு கடந்த கால ஞாபகம் ஒன்று எட்டிப் பார்த்தது.
அப்போது அம்னா நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு தடவை வாப்பாவும் அம்னாவும் சந்தைக்குச் சென்றிருந்தார்கள்.
வாப்பாவின் சைக்களில் ஏறி அவர் வாங்கித் தந்து ஐஸ்கிரீமை சுவைத்தவாறு செல்வதென்றால் ஆனந்தத்தை கேட்கவும் வேண்டுமா! வெகு உல்லாசமாக பாட்டுப் பாடியவாறே சென்று கொண்டிருந்தாள். வாப்பாவின் நிழலில் கிடைக்கும் சுதந்திரமும் ஆனந்தமும் வேறு எங்கும் கிடைக்காதே..
அடுத்த வாரம் பாடசாலை விடுமுறை. தொலைதூரத்தில் வசிக்கும் அம்னாவின் பெரியப்பா தனது குடும்பத்தோடு வருவதாக அறிவித்திருந்தார். அதற்காக சில பொருட்களை வாங்குவதற்காகத்தான் வாப்பாவும் மகளும் புறப்பட்டிருந்தார்கள்.
வாப்பா சைக்களை ஓரமாக வைத்து விட்டு கையில் உமல் பையை எடுத்துக் கொண்டார். அவரின் விரல் நுனியைப் பிடித்திருந்த அம்னா அந்த சனக் கூட்டத்தைப் பார்த்து வாயைப் பிளந்தவாறு அசைந்தாடிச் சென்று கொண்டிருந்தாள்.
இடையில் என்ன நடந்ததென்று தெரியவில்லை. எப்படியோ வாப்பாவின் கை நழுவிவிட்டது. தூரத்தில் குறவன் ஒருவன் பாம்பாட்டிக் கொண்டிருந்தான். அவனின் வாயிலிருந்த மகுடி போட்ட தாளத்திற்கு ஏற்ப பெட்டியிலிருந்த நாகப்பாம்பு நடனமாடிக் கொண்டிருந்தது. வலமும் இடமுமாக வளைந்து அது ஆடிய ஆட்டத்தை இரசிக்கவென்றே ஏகப்பட்டவர்கள் சூழ்ந்திருந்தார்கள். அம்னாவுக்கு பாம்பு என்றால் கொள்ளைப் பயம். தொலைக்காட்சியில் அதைப் பார்த்தாலே பற்கள் கிடுகிடுக்க ஆரம்பித்து விடும். இரவு நேரத்தில் ‘பாம்பு’ என்ற வார்த்தையைச் சொன்னாலே அது வந்துவிடும் என்று உம்மா வேறு பயம் காட்டியிருந்தார்.
ஆனால், இப்போது அதை வேடிக்கை பார்க்கலாம் என மனது கேட்டுக் கொண்டது. ஆக, வாப்பாவின் விரலை விட்டுவிட்டு பாம்பை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள். வாப்பாவும் ஏதோ ஞாபகத்தில் மகள் பின்னால்தான் வந்து கொண்டிருக்கின்றாள் என்ற நினைப்பில் தன் பாட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
எவ்வளவு நேரம் சென்றது என்று தெரியவில்லை.
திடீரென்று..
ஏதோ நினைவு வந்து அம்னா திரும்பிப் பார்க்க வாப்பாவைக் காணவில்லை. திடுக்கிட்டது அவளுக்கு. அணைக்கட்டு உடைந்த கண்ணீரை விழுங்கிக் கொண்டு அக்கம் பக்கம் பார்த்தார். வாப்பா இல்லை. பூமி தலைகீழாக சுழல ஆரம்பித்தது. கண்கள் இருட்டிக் கொண்டே வந்தன. யாரிடம் கேட்பது என்பது புரியவில்லை.
விம்மியவாறு திக்கித்துப் போய் நின்று கொண்டிருந்தாள் அவள்.
எவ்வளவு நேரம் சென்றது என்று தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு நொடியில் அவளை கண்களை பறித்து விட்டு கொடிய பாலைவனத்தில் எறிந்து கொடுமைப் படுத்தின.
யாரோ அம்னாவின் தோளைத் தொட்டார்கள்.
திரும்பிப் பார்க்க…
அங்கே அவளது வாப்பா நின்று கொண்டிருந்தார்.
அவ்வளவுதான். அவரைக் கட்டிக் கொண்டு ஓடிவென அழ ஆரம்பித்துவிட்டாள். ‘என்ன விட்டுட்டு எங்க வாப்பா போனீங்க..’ என திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாள்.
வாப்பா மெதுவாக அவரின் காலடியில் முழந்தாளிட்டார்.
அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டார்.
அவளின் கண்களைப் பார்த்து புன்னகைத்தார்.
‘மகள் வாப்பா உங்களை விட்டுட்டு எப்போதும் எங்கேயும் போக மாட்டேன். சிலநேரம் நான் உங்கட கண்ணுக்குத் தெரியாட்டி நீங்க அழக் கூடாது. பதறக் கூடாது. பயப்படக் கூடாது. எப்போதும் தைரியமாக இருக்கனும்.’ என்றார்.
அவர் சொன்ன வார்த்தைகள் இப்போது அம்னாவுக்கு நினைவில் வந்தன.
கண்ணீரைத் துடைத்துவிட்டு வெளியே வந்து நின்றாள் அம்னா. மனதில் ஓர் உறுதி ஏற்பட்டிருந்தது. இதற்குப் பிறகும் அழக் கூடாது என தீர்மானித்திருந்தாள். இந்த வாழ்க்கை ஒரு கோழைத்தனமான நாயைப் போன்றது. நாம் பயந்து, அஞ்சி, நடுநடுங்கி ஓட… அது விடாமல் துரத்தத் தொடங்கும். ஆனால், துணிந்து எதிர்த்து நின்றால், நான்கைந்து அடிகள் முன்னே எடுத்து வைத்தால், அது அஞ்சி தலை தெறிக்க ஓடி விடும்.
வாப்பா இனி இல்லை என்பதை ஜீரணிக்க முடியாதுதான். திருமணம் என்ற பெயரில் தனது வாழ்வில் நடந்த அக்கிரமத்தை இனி சரிசெய்ய முடியாதுதான். ஆனால், அனைத்தையும் விட்டு மீண்டு வர வேண்டும். வாப்பா விரும்பியவாறு வாழ்ந்து காட்டுவதுதான் வாப்பா தன் மீது கொண்ட நம்பிக்கைக்கும் நேசத்திற்கும் ஒரே வழி என தீர்மானித்துக் கொண்டாள்.
இந்த உலகத்தில், இந்த வாழ்வில் இழக்க எதுவுமே இல்லை என்றாகிவிட்ட பிறகு வருமே பாருங்க ஒரு தைரியம்… அதற்கு ஈடு இணை இல்லை. ஒட்டுமொத்த உலகமே எதிர்த்து நின்றாலும் எட்டி உதைத்து குப்பைத் தொட்டியில் எறிந்து விடலாம்.
அம்னா தீவிரமாக யோசித்தாள். இப்போதுள்ள பிரச்சினை பொருளாதாரம்தான். ஏதாவது தொழில் செய்ய வேண்டும். படித்த பல்கலைக்கழக படிப்புக்கு ஏற்ற தொழில்தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஏதாவது செய்யலாம். ஆனால், என்ன செய்வது என்று சீரியஸாக சிந்தித்துக் கொண்டிருக்கும்போதுதான் அவளது கண்களில் எதிரே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அபாயா தென்பட்டது.
அது அவள் தைத்தது.
கறுப்பு நிற அபாயா அது. அதனை அதிகம் அலங்காரப் படுத்தாமல் கைகளின் பகுதிகளுக்கு மட்டும் சின்னச் சின்ன சித்திரப் பூக்களை சேர்த்து அழகுபடுத்தியிருந்தாள். அந்த அபாயாவுக்கு தோழிகளின் மத்தியில் நல்ல மவுசு இருந்தது. நான்கைந்து பேர் அதை தமது வீட்டு விசேஷங்களுக்கு இரவலாக வாங்கிச் செல்லும் அளவு அதற்கு தெனாவட்டான மதிப்பு இருந்தது.
அம்னாவின் கண்கள் பளிச்சிட்டன.
புhடசாலைக் காலங்களில் இருந்தே அவளின் பொழுதுபோக்கு வாப்பாவின் டைலர் கடையில் உட்கார்ந்து கொண்டு அவரோடு அரட்டையடிப்பதுதான். வாப்பா இடைக்கிடை சின்னச் சின்ன உதவிகள் கேட்பார்;. அதை ரசித்துச் செய்து கொடுத்தவாறு வாப்பா செய்யும் ஒவ்வொரு வேலைகளையும் நுணுக்கமாக பார்த்துக் கொண்டிருப்பாள். அப்படி அவள் கற்றுக் கொண்டதுதான் இந்தத் தையல் தொழில். ஆனால், தனது தோழிகளுக்கு அவ்வப்போது சிலவற்றை தைத்துக் கொடுத்ததோடு சரி, அதை அவள் என்றுமே வருமான மார்க்கமாகப் பார்த்ததில்லை. ஆனால், இப்போது அது தேவைப்பட்டது. அவசியமாக, அவசரமாக, அத்தியாவசியமாக தேவைப்பட்டது.
தானே ஒரு அபாயாக் கடை போட்டால் என்ன என சிந்தித்துப் பார்த்தாள் அவள். ஆனால், சொந்தக்காரர்கள் ஏதாவது சொல்வார்களே என மனது கொஞ்சம் சங்கடப்பட்டது. ஆனால், இடைநடுவில் எட்டிப் பார்த்த மூளை அவளது மண்டையில் இரண்டு தட்டுத் தட்டி ‘சொந்தக்காரர்கள் என்றால் எல்லாற்றுக்கும்தான் கதை சொல்ல வருவார்கள். ஆனால், உபதேசம் செய்யும் யாரும் உதவிக்கு வர மாட்டார்கள்’ என்று அறிவுரை சொல்லியது.
அம்னா எழுந்து நின்றாள். அடி வானம் உச்சந் தலையில் இடித்தது.
அடுத்த நாளே வாப்பாவின் டைலர் பொருட்கள் வீட்டுக்கு இடம்மாறிவிட்டன. கடகடவென தையல் மெஷின் சத்தம் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.
ஆறு மாதங்கள் கடந்தோடி விட்டன.
கொழும்பு நகரின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றின் இரண்டாம் மாடியில் போடப்பட்டிருந்த இருக்கையில் படபடக்கும் நெஞ்சோடு அமர்ந்து கொண்டிருந்தாள் அம்னா. மூழ்கும் கப்பலில் அங்கும் இங்கும் உயிரைக் காப்பாற்ற ஓடித் திரியும் எலிகள் போன்று அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருந்த நகர மக்களை ஆச்சரியமாக வாய் பிழந்து நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் பக்கத்தில் உட்கார்ந்திருந்த உம்மா.
ஆறு மாதங்கள்
இந்த ஆறு மாதங்களில் என்னவெல்லாம் நடந்து விட்டது என்பதை மீட்டிப் பார்த்த போது அவளாலேயே ஆச்சரியத்தைத் தாங்க முடியவில்லை. அனைத்துமே கனவு போலதான் இருந்தன.
முதலில் ராசிக் மச்சானிடம்தான் போய் நின்றாள்.
‘மச்சான், வாப்பா இனி இல்ல. யார்ட கையையும் நம்பி இருக்க ஏலாது. நான் அபாயா தைக்கப் போறான். வீட்ட இருந்துதான். எனக்கு கொஞ்சம் மெட்டீரியல் வாங்கித் தர முடியுமா!’ என கையில் இருந்த கசங்கிய பண நோட்டுக்களை நீட்டினாள்.
ராசிக் மெதுவாக புன்னகைத்தான்.
‘நல்ல முடிவுதான். நாளைக்கு நான் கொழும்பு போற வேலை இருக்கு, உனக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு வாரன். ஆனால், காசு இப்ப அவசரம் இல்லை. பிறகு எடுத்துக் கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டான். சொன்ன படியே அடுத்த நாள் அவள் கேட்ட அனைத்தையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்திருந்தான்.
அவள் ஆரம்பித்தாள்.
இணையதளம் அவளுக்கு ஏகப்பட்ட ஆலோசனைகளை அள்ளித் தந்தது. சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி அவளை இரவு பகலாக போராட வைத்தது. அவளது தோழிகளே அவள் தைத்த அபாயாக்களை அள்ளி வாங்கத் தொடங்கினார்கள். வாய்க்கு வாய் அவளது தையல் பற்றிய கதைகள் பரிமாறப்பட்டன. இறுதியாக, அவளால் தனி ஆளாக சமாளிக்க முடியவில்லை. துணைக்கு இன்னும் இருவரை சேர்த்துக் கொண்டாள். கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு வாப்பாவின் தையல் கடையை கொஞ்சம் மெருகேற்றி விற்பனைக் கூடமாக மாற்றிவிட்டாள். ராசிக் அவளுக்கு பெரும் ஆதரவாக நின்றான். அவளுக்குத் தேவையானவற்றை பெரும் மனதோடு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அவள் வெளியூர்களுக்கு அனுப்ப வேண்டிய பொதிகளை தபாலிலோ, பஸ்ஸிலோ கொடுத்து அவளுக்கு உதவி செய்தான்.
இந்த நேரத்தில்தான் கொழும்பில் இருந்து அந்த அழைப்பு வந்தது. ‘சிஸ்டர், நாங்க இத்தனை நாளாக அபாயாக்களை வெளிநாட்ல இருந்துதான் கொண்டு வாரம். ஆனால், அவற்றை விட உங்கட வேலைகள் தரமாக இருக்கு. எங்கட ழககiஉந வந்து ஆநநவ பண்ண முடியுமா?’ என அழைப்பு வந்திருந்தது. அதுவும் இலங்கையின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான அந்த வர்த்தக சாம்ராஜ்யத்தின் தலமையகத்திடமிருந்து..
அவளால் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், அச்சப்படவில்லை. உம்மாவையும் மாமாவையும் அழைத்துக் கொண்டு, கையில் சில மாதிரிகளையும் அள்ளிக் கொண்டு வந்துவிட்டாள்.
அவளைச் சந்திக்க ஒருவன் வந்திருந்தான். தன்னை அக்ரம் என அறிமுகப்படுத்திக் கொண்டான். அவள் கொடுத்த மாதிரிகளை கவனமாக ஆராய்ந்தான். இன்னும் நான்கைந்து பேரையும் வரவழைத்து அவற்றைக் காட்டினான். அவர்களின் முகத்தில் தோன்றிய திருப்தியுணர்வு அவளுக்கு நம்பிக்கையை பரிசளித்தது.
‘உங்கட வேர்க் எல்லாம் மிச்சம் நல்லா இருக்கு. நிறையப் பேர் உங்கட வேர்க் பற்றி சொன்னாங்க. ஆனால், ஒரு வருஷத்துக்கு முப்பது டிசைன்ல எங்களுக்கு மூவாயிரம் அபாயா உங்களால் தர முடியுமா?’ என கேட்டான் அவன். அதிகம் சுற்றி வளைக்காமல் அதையும் இதையும் உலத்தாமல் கண்களைப் பார்த்து விஷயத்தை மட்டும் பேசிய அவனது தோரணை அவளுக்குப் பிடித்திருந்தது. மெதுவாக கண்களை மூடி தன்னால் அவ்வளவு பெரிய ஓடரை செய்து கொடுக்க முடியுமா? என சிந்தித்துப் பார்த்தாள். ‘ஒரு கை பார்க்கலாம்’ என மனது தைரியம் தந்தது.
அப்புறம் என்ன…
‘நான் செய்து தருகின்றேன்’ என ஒத்துக் கொண்டாள். அக்ரமுக்கும் அவள் சம்மதித்தது பெரும் மகிழ்ச்சி. மாதா மாதம் அவர்களே வந்து தைத்தவற்றை எடுத்துக் கொள்வதாகச் சொன்னார்கள். முற்பணமாக ஐந்து இலட்சம் கொடுத்தார்கள். உடன்படிக்கையில் கையெழுத்து வைத்துவிட்டு எழுந்து அவள் எழுந்து வரும்போது மனதுக்குள் வாப்பாவின் புன்னகை எதிரொலித்தது.
கொழும்பிலிருந்து வந்தவர்களை கூட்டிப்போக தனது ஆட்டாவுடன் ராசிக் வந்திருந்தான்.
அந்திமாலை நேரம்
அசைந்தாடிபடி ஆட்டா சென்று கொண்டிருந்தது. கம்பனிக் காரர்கள் தந்த ஐந்து இலட்சத்தை என்ன செய்யலாம் என உம்மா மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். நீண்ட நாட்களாக குசினிப் பக்கம் ஒழுகுகின்றது. மழை பெய்தால் எட்டிப்பார்க்கவே முடியவில்லை. எப்படியாவது அதை சரி செய்துவிடனும். ஒரு தொகையை புரோக்கர் நானாவிடம் கொடுத்து மகளுக்கு நல்ல இடத்தில் வரன் ஒன்று பார்க்கச் சொல்லனும்… என ஆயிரத்தெட்டு கற்பனைகள் அவளது மனதில் இழையோடிக் கொண்டிருந்தன.
‘மச்சான் கொஞ்சம் ஆட்டாவை நிப்பாட்டுறீங்களா?’ என்றாள் அம்னா திடீரென…
ராசிக்குக்கு என்ன என்று புரியவில்லை. அடர்ந்த காடு அது. நேரம் இரவு பத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவில் யாருமில்லை. ஏன் இந்த நேரத்தில், இந்த இடத்தில் நிறுத்தச் சொல்கின்றான் என அவனுக்குப் புரியவில்லை. எதற்காக என்று தலையைக் குழப்பியவாறு வலது பக்கம் பார்க்க அங்கே மையவாடி பெயர்ப்பலகை போட்டிருந்தது.
ஓ.. அம்னாவின் வாப்பா இங்கேதான் தூங்கிக் கொண்டிருக்கின்றார்…
‘கொஞ்சம் இருங்கம்மா. ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்’ என்று சொல்லிவிட்டு வெளியே இறங்கினாள். அதோ ஒரு வேப்பிலை மரம் கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றதே.. அதற்கு வலது பக்கம்தான் அவளது வாப்பாவை அடக்கியிருக்கின்றார்கள் என்று அவளுக்குத் தெரியும்.
புதிய நிர்வாக சபையினர் மையவாடியை அழகாக அலங்கரித்திருந்தனர். ஆங்காங்கே கிளம்பி நின்ற புதர்ச்செடிகளை வெட்டியெறிந்து விட்டு மின் விளக்குகளால் அலங்கரித்திருந்தனர்.
மெதுவாக அடிமேல் அடி வைத்து வேலயோரம் வரை சென்றாள். அவளது வாப்பாவின் மண்ணறை தெளிவாகத் தெரிந்தது. தனது இரு கைகளாலும் வேலிக்கம்பியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கண்களை கூர்மையாக்கிக் கொண்டு அந்த மண் மேட்டை உற்றுப் பார்த்தாள் அவள்.
அவளது செல்ல வாப்பாவை அதற்குள் வைத்துத்தான் முகத்தில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டு வந்திருந்தார்கள்.
‘வாப்பா!’ மெதுவாக விசும்பினாள் அவள்.
சத்தம் தொண்டையை விட்டு வெளியே வரவில்லை.
‘வாப்பா….!| இன்னும் சத்தமாக அழைத்தாள் அவள். கண்ணீர்தான் அணைக்கட்டுக்களை உடைத்துவிட்டு கன்னங்களில் புரண்டோடத் தொடங்கியது. வாப்பாவை கட்டியணைத்துக் கொண்டு ஏன் வாப்பா என்னை விட்டுட்டுப் போனீங்க.. என்னை தனிய விட்டுட்டுப் போக உங்களுக்க எப்படி மனது வந்தது என்று கேட்டு கதறி அழனும் போல இருந்தது. தனக்கு கிடைத்த வியாபார வாய்ப்பைச் சொல்லி ஆனந்தப் பட வேண்டும் போலிருந்தது.
தான் சிறு பிள்ளையாக இருக்கும்போது டீச்சரிடம் அழுது அடம்பிடித்து வாங்கிக் கொண்டு வரும் வெரிகுட் அடையாளத்தை வாப்பா வேலை முடிந்து வரும் வரை காத்திருந்து அவரிடம் காட்டுவாள். வாப்பாவும் அவள் என்னமோ நான்கைந்து நோபல் பரிசுகளை தன் பாடசலைப் பையில் அள்ளிக் கொண்டு வந்த அளவில் பாராட்டித் தள்ளுவார். இப்போது, வெறும் கூட்டுப்புழுவாக இருந்த தான் பட்டாம்பூச்சியாக பரிணமித்துக் கொண்டிருப்பதை கண்டால் வாப்பா எவ்வளவு சந்தோசப்படுவார்…
ஆனால்,
ஆனால்….
என்ன செய்ய முடியும்…
அப்படியே சாய்ந்து உட்கார்ந்து விட்டாள். அவளை வீட்டுக்கு கொண்டு வர உம்மா பட்டபாடு இருக்கின்றதே…




Leave a Reply