(கவிதாயினி 001)
வாழ்விழந்து வழியிழந்து
வறுமையின் வாடைக்காற்றுக்கு வயப்பட்ட வஞ்சமற்ற
வாழ்நாள் கைதியானேன்.
உருவம் அழிந்து உடைமை துறந்து,
உறவு எனும் பாலம் இடிந்து
விழுந்த போது
மடி தாங்க எந்த மனமும் இறங்கவில்லை.
அங்கு காணலானேன்
மனிதம் எனும் மகத்துவம்.
காணலாய் காட்சியளித்தது
என் கண்களுக்குக் கூட
காட்டாறாய் கட்டவித்துச் சென்ற
இந்த மனிதம் எனும் மகத்துவம்
கொடுமையான கொடையாய் கொடியவன்
அளித்த வரமானது இந்த கொரோனா
தொட்டுணர்ந்தால் முற்றுப் பெறும் உன் வாழ்வு
என எச்சரிக்கை மணி முழங்கியது
ஒவ்வொரு செவிப்பறையிலும்.
அந்நொடி
மடை திறந்த வெள்ளமாய்
வழிந்தோடியது
மனிதம் எனும் மகத்துவம்
அங்கோ வயிறு நிரம்பி வாய் வழியாய்
பொங்கி வழிய
இங்கோ உள்ளிழுத்த வயிறு இன்னும் பல
இரைச்சல்களுடன் முழங்கிக் கொண்டிருக்க
கண்டேன்…
மரணத்தில் இருந்து விடை பெற்ற மகத்துவம்
தனை…
பிஞ்சு மழலை மனதிலும் நஞ்சாய் பதிந்துள்ள
பண மோகத்தையும்
கெஞ்சிக் கேட்டும் கொஞ்சமும் கை தாழ்;த்த
எண்ணாத பணப் பிசாசுகளிடம் கிஞ்சிதமும்
மனிதம் இல்லை என்பதை கச்சிதமாய்
உணர்த்துகிறான் அந்த ஏழைக்கு…
அங்கு காணலானேன மனிதம்
எனும் மகத்துவம் தனை…
மனிதம் போற்ற சர்வ வல்லமையும் பெற
வேண்டும் என்பதில்லையடா!
மனதளவில் கொஞ்சமேனும் ஈரம் போதும்…
அங்கு காண்பாய் மனிதம் எனும் மகத்துவம் தனை…
மன்னார் மாவட்டத்தில் வேப்பங்குளம் எனும் ஒரு கிராமத்தில் இருந்து நேர்எதிர் சிந்தனைகளோடு மற்றவர்களுக்கு மத்தியில் சற்றேனும் வித்தியாசமாய் தன் வாழ்வுச் சரிதம் இடம்பெற வேண்டும் என்ற பேராவாக் கொண்டவள்.
சிறு வயதில் இருந்தே எழுத்துத் துறையில் இருந்த அதீத ஆர்வம் தான் இன்று பல கவிதைகள் புனைவதற்கு பெரும் உந்துகோலாய் இருந்திற்று.
தன் எண்ணச் சிதறல்களால் தன் பெற்றோர் மனம் மகிழ வேண்டும் என்பதே இன்னவளின் மிகப் பெரிய அவா.
றிஸ்லா ஹம்ஸா
கவி நிலா என்ற பெயரில் எழுத்துலகில் பிரகாசிக்கும் ஓர் இளம்பிறையாக றிஸ்லா அறியப்படுகின்றார். கவிதைகள், பத்திகள், கட்டுரைகள் என விரிவடையும் அவரது எழுத்துக்கள் இந்த உலகிற்கு இதுவரை சொல்லப்படாத பல அழகியல்களையும் சொல்ல வேண்டிய பல அவசியங்களையும் இணைத்துச் செல்கின்றன.
வாழ்த்துக்கள்!




Leave a Reply