குழந்தைகள் களைகள் அல்ல பராமரிக்க வேண்டிய பயிர்கள் – Inshirah Ifham
உயிரியல் பாடத்தில் இராணுவப் புழு என்று ஒரு பீடை பற்றி கற்போம்.
இரவோடு இரவாக முழு வயலையும் துவம்சம் செய்யும் இது.
விவசாயி அந்தி சாயும் நேரத்தில் வீட்டுக்கு வரும் போது பெத்த பிள்ளையைப் பார்ப்பது போல வயலை பார்த்து விட்டு வருவான். எந்த பிரச்சினையும் இருப்பது போல் இருக்காது. விடியற்காலை வயல் அல்லோல கல்லோலமாக இருக்கும். முழு வயலையும் ஒரு கை பார்த்து விடும் இந்த இராணுவப் புழு. கூட்டமாக இணைந்து வேலை செய்யும்.
எங்கள் வீட்டிலும் 3 இராணுவப் புழுக்கள் இருக்கின்றனர்.
பொதுவாக அடி தடி வீட்டை மறுபுறம் பிரட்டுவார்கள்.
ஆனால் வீட்டுக்கு ஒரு அன்பளிப்பு வந்தாலோ தந்தையார் ஏதாவது எடுத்து வந்தாலோ மூவரும் ஒற்றுமையின் வரைவிளக்கனமாகுவார்கள்.
எனக்கு வீட்டினுள் சுரங்க பதுங்கு குழிகள் உருவாக்க வேண்டிய கட்டாயம்.
பதுங்கு குழிகளை வேவு பார்க்கவும் பலமான ஏற்பாடுகள் நடைபெறும்.
சின்னவன் தானே என நாம் பதுங்கு குழியை திறந்தோமானால் அவன் தான் ஒற்றனாக இருப்பான்.
இடம் கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது நான் பதுக்காதுவிடினோ இராணுவப் புழுக்களின் கைங்கர்யம் நடைபெறும்.
ஒரு சீப்பு வாழைப்பழம் ஒரு நொடியில் காலியாகும்.
ஒரு பக்கட் பிஸ்கட்டும் ஸ்வாஹா ஆகும்.
பிள்ளைகளுக்கு குடுக்காம கஞ்சபிசினாரியா இருந்துட்டு அத பீற்றிக் கொள்ளவும் செய்றாவே என நீங்கள் யோசிக்கலாம்.
எந்தவொன்றையும் திகட்ட திகட்ட கொடுக்க கூடாது. தனித்தனியாக மூன்று பகட்களை பிள்ளைகளுக்கு கொடுப்பதை விட ஒரு ஒரு பகட் ஆக மூன்று வேளை கொடுக்கலாம் இதன் மூலம் பகிர்ந்துண்ணவும் பழக்கலாம், வீணடிக்காமல் இருக்கவும் கற்றுக் கொடுக்கலாம்.
வேளைக்கு ஒரு தடவை லீடரையும் மாற்றிவிட்டால் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படல், தலைவராக செயல்படல் போன்ற இயல்புகளையும் வளர்க்கலாம்.
அடுத்த பிரச்சினை வீட்டை காடாக்கல்.
புள்ளைகள் நான் தொழப்போறேன். தொழுது முடியிர நேரம் அந்தந்த சாமான் அந்தந்த இடத்தில் வைத்தீர்களென்றால் அடுத்த சர்ப்ரைஸ் தரப்படும் என போற போக்கில் ஒரு அனௌன்ஸ்மன்ட் விட்டோமென்றால் மூன்று இராணுவப்புழுக்களும் எறும்பின் சுறு சுறுப்போடு இயங்குவார்கள்.
இப்படி ஏராளம் ஏராளம்
குழந்தைகளை அது பாட்டில் வளரும் களை போல வளர விடாதீர்கள்
நீர் பாய்ச்சி , பசளை இட்டு பராமரிப்புச் செய்து வளர்த்தெடுங்கள்.




Leave a Reply