அத்தியாயம் 07
காலங்கள் கடந்து விட்டன.
காழி கோட்டிலிருந்து வெளியே வந்தாள் அம்னா. பென்னம் பெரிய நெருப்புப் பாறாங்கல்லை விழுங்கியது போன்று இதயம் சகிக்க முடியாமல் வலித்தது. பொங்கி வழிந்து கொண்டிருந்த கண்ணீர்த் துளிகளை துடைக்கவும் மனமின்றி அருகே காணப்பட்ட வேப்ப மர நிழலில் அமர்ந்து விட்டாள்.
அவளது கற்பனைக் குதிரை திடீரென உயிர் பெற்று எழுந்து கடந்த காலத்தை நோக்கி ஓடத்தொடங்கியது. ஆனால், வழி முழுக்க வலியில் நனைந்திருந்த கண்ணீர்த்துளிகளே நிறைந்திருந்ததால் ஓட முடியாமல் இடறி விழுந்து விம்மியழுதது.
ஆறு மாதத்திற்கு முன்னர்
சிறைச்சாலைக்குச் சென்ற அஸ்ஜத் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டான். வந்த நாளிலிருந்து அவனது அட்டூழியம் அளவு கடந்து விட்டது. எப்போதும் போதையில் மிதக்க ஆரம்பித்து விட்டான். எதற்கெடுத்தாலும் அம்னாவை ஏறி மிதித்தான். என்ன கேட்டாலும் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். ஒட்டுமொத்த நரக வேதனைகளையும் ஒரு இரும்புக் கம்பியாக்கி அதனால் தினம் தினம் அம்னாவின் உயிர் மீது சூடு வைத்துக் கொண்டிருந்தான் அவன். போதாக்குறைக்கு மாமியார் வேறு ‘வாரிசுப் பெற்றுத் தா வாரிசு பெற்றுத்தா’ என புலம்பிக் கொண்டிருந்தார்.
வீட்டின் தலைவரான மாமா வேறு ரகம்.
அவருக்கு வீட்டுக்கும் சம்பந்தமே இல்லாதது போல நடந்து கொண்டார். ஊர் ஊராகச் சென்று சமூகப் பணிகள் செய்து கொண்டிருந்தார். மேடைகளில் ஏறி சமூகத்தின் அவலநிலை பற்றி முதலைக் கண்ணீர் வடித்தார். ஆனால், வீட்டில் ஒரு அப்பாவிப் பெண் அகப்பட்டு ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருப்பது அவரது கண்களுக்குத் தெரியவில்லை.
அம்னா திக்பிரமை பிடித்து நின்றாள்.
தனது கணவனின் அநியாயங்களில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது என்று அவளுக்குப் புரியவில்லை. தனக்கு நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு தினம் தினம் நெருப்பில் வெந்து கொண்டிருக்கும் வாப்பாவை எவ்வாறு சமாளிப்பது என்று புரியவில்லை. அனலில் விழுந்த அந்தக மண்புழு போன்று ஒவ்வொரு நொடியும் துடித்துக் கொண்டிருந்தாள். தனது கணவனைத் திருத்த அவள் எவ்வளவோ போராடி.. திரும்பத் திரும்பத் தோற்றுக் கொண்டிருந்தாள். ஆனால், எத்தனை தடவை தோற்று விழுந்தாலும் அவளது ஆழ் மனதின் எங்கோ ஓர் ஓரத்தில் அவன் திருந்தி விடுவான் என்ற நப்பாசை சிறு புதர்ச் செடியாய் முளைத்துக் கிடந்தது. ஆனால், அந்த செடியையும் பிடுங்கி குப்பைத் தொட்டியில் தூக்கியெறிவது போல நடந்தது ஒரு சம்பவம்.
அன்று வெள்ளிக்கிழமை
அம்னாவின் பிறந்த நாள்
விடிந்திருக்கவே கூடாத நாள் அது
ஆனால், என்ன செய்ய
விடிந்து விட்டது.
ஏதோ சொந்தக்கார வீட்டு மையத்து வீடு என்று வீட்டில் உள்ள அனைவரும் தொலைதூர கிராமம் ஒன்றுக்கு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி விட்டார்கள். வீட்டில் அஸ்ஜத்தும் அம்னாவும் மட்டும்தான்.
அதிகாலையிலேயே வாப்பாவின் வாழ்த்துச் செய்தி வந்திருந்ததால் அம்னாவுக்கு கொஞ்சும் குதூகலம் பிறந்திருந்தது. வாப்பா வாங்கித் தந்திருந்த வெள்ளை ஷல்வாரை அணிந்து கொண்டாள். கருநீல கரைகள் போடப்பட்ட மெரூன் கலர் துப்பட்டாவைச் சுற்றிக் கொண்டாள். தனது அகன்ற விழிகளுக்கு கரு மையால் கொஞ்சம் கலரேற்றிக் கொண்டாள். மிக நீண்ட நாட்களுக்குப் பின் கண்ணாடி முன் நின்று தன்னை கொஞ்சம் தானே நோட்டமிட்டுக் கொண்டாள். கண்டவுடனேயே அசந்து போக வைக்கும் அளவு அசத்தலான அழகி அல்ல அவள். ஆனாலும், வசீகரமானவள். அதுவும் அந்த ஆடை அவளது அழகை இரட்டிப்பாக்கி அவளது காயப்பட்ட உள்ளத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த மயிலிறகால் மெதுவாய் வருடியது.
நேரத்தைப் பார்த்தாள்.
மாலை ஏழு மணி.
என்ன நினைத்தாலோ தெரியவில்லை. தனது கணவனுக்கு இன்று அவனுக்குப் பிடித்த உணவுகளை சமைத்துப் பரிமாற வேண்டும் என ஆசை பிறந்தது. அவனுக்கு தேங்காய்ப் பிட்டும் இறைச்சிக் கறியும் என்றால் உயிர். கூடவே, மாம்பழ பானத்தையும் வைத்தால் அவனது முகத்தில் ஆயிரம் ஆதவன்கள் பிரகாசிக்க ஆரம்பித்து விடும்.
அவசர அவசரமாக சமைத்துக் கொண்டிருந்தவளை கதவு திறந்த சத்தம் நினைவுலகிற்கு அழைத்து வந்தது. ஓடிப்போய்ப் பார்க்க.. அங்கே அவளது அன்புக் கணவன் கதவடியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். உச்சகட்ட போதையில் அவனது வாய் ஏதேதோ சொல்லி புலம்பிக் கொண்டிருந்தது. ஆனால், பிரச்சினை இது மட்டுமல்ல.. அருகிலேயே கோழிக் குஞ்சை குறி பார்க்கும் திருட்டு நரியின் பார்வையுடன் இன்னொருவன் நின்று கொண்டிருந்தான்.
அம்னாவைக் கண்டவுடன் அவன் கேவலமாக இளித்தான்.
‘இன்று உங்கட ஆள் கொஞ்சம் ஓவராகப் பொய்ட்டான். நாங்க எவ்ளோ சொல்லியும் கேட்கல்ல’ என்றான். அவள் பதிலொன்றும் சொல்லவில்லை. அள்ளிக் கொண்டு வந்த அழுகையை சமாளிப்பதே பெரும் போராகிவிட்டது அவளுக்கு.
அவளது மௌனத்தை அவன் தவறாக மொழிபெயர்த்து விட்டான் போல.. அடுத்த அம்பை நாணில் ஏற்றினான்.
‘இவ்வளவு பசுந்தான தேவதை வீட்டில் இருக்கும்போது… எப்படித்தான் இவனுக்கு குடிக்க மனம் வருதோ தெரியல்ல’ என்று வழிந்தான்.
அம்னா திடுக்கிட்டாள். அவன் இப்படி பேசுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. அந்நிய ஆண் ஒருவன் கட்டிய கணவன் முன்னே இப்படி பேசும்படி தனது வாழ்க்கை அழுகி விட்டதே என மனம் பற்றியெரிந்தது. அசூயையை மிதித்தது போன்று அருவெறுப்பாக இருந்தது. ஆனால், அஸ்ஜத்தோ அந்த வார்த்தைகளை கேட்டு ஏதோ மிகப்பெரிய நகைச் சுவையைக் கேட்டது போன்று சத்தம்போட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.
இதற்கு மேலும் அங்கு நிற்கக் கூடாது என்று அவள் திரும்பப் பார்த்தாள்.
ஆனால்,
யாரோ அவளது கையைப் பிடித்தார்கள்.
மின்சாரம் தாக்கியது போன்று அவள் திரும்ப..
அது அவன்தான். அவனேதான். அம்னாவுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியவில்லை. தனது ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி அவனது கன்னங்களில் பளார் பளார் என்று நான்கைந்து அறைவிட்டு விட்டு முகத்தில் காறித் துப்பி விட்டு அதே கோலத்தோடு வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள். அவன் அப்படி அலங்கோலமாக பேசியதை விட எல்லாவற்றையும் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த அஸ்ஜத்தின் கோலம்தான் அவளை முற்றாக வெறுக்க வைத்துவிட்டது.
மாமா மாமி வந்து பேசிப் பார்த்தார்கள். மாமா பென்னம்பெரிய உபதேசம் செய்தார். குழந்தையொன்று பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என மாமி இளித்தார். ஆளுக்காள் தூது விட்டார்கள். அக்கம் பக்கத்து வீட்ட கிழவிகள் வந்து அழுது தீர்த்தார்கள். ஆனால், அவள் முடிவெடுத்து விட்டாள். இப்படிப்பட்டவனுடன் வாழ்வதை விட தனியாகவே வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்று.
ஆறு மாதம் கடந்து விட்டது.
காழியார் அம்னாவின் முறைப்பாட்டை ஏற்றுக் கொண்டு தலாக் வழங்கிவிட்டார். ‘பரவாயில்லை.. வாப்பா இருக்கிறார்தானே.. அவரின் நிழலே போதும்’ என அவளது உள் மனது உறுதியாய் உச்சரித்துக் கொண்டது.
வேப்ப மர இலைகள் காற்றுக்கு மெதுவாய் அசைந்தன.
நன்கு பழுத்திருந்த வேப்பம் பழமொன்று அவளது தோளில் விழுந்து சிதறியோடியது.
வாப்பா இரண்டு நாட்களாக நெஞ்சு வலி என சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்குத் துணையாக உம்மாவை வைத்து விட்டு சியாமாவுடன்தான் அவள் காழி கோட்டுக்கு வந்திருந்தாள். வீட்டிலிருந்து ஐந்து நிமிட தூரம்தான் என்பதாலும் இன்று இறுதித் தீர்ப்பு தருவார்கள் என்று தெரியாததாலும் வாப்பாவை விட்டுவிட்டு வந்திருந்தாள்.
மெதுவாய் எழுந்து நின்றாள். தலை கொஞ்சம் வலிப்பது போல இருந்தது. காரணமின்றி தனக்குள்ளேயே மெதுவாய் பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டு வீட்டை நோக்கி இயந்திரமாய் நடக்கத் தொடங்கினாள். என்னதான் நரக வாழ்வை வெறுத்து தலாக் கேட்டு காழி கோட் வாசலில் கால் வைத்தாலும் அந்த அதிர்ச்சியை.. அந்த வலியை… அந்த துயரத்தை… எந்தவொரு மொழியினாலும் வர்ணித்துவிட முடியாது.
சற்றுத் தொலைவில் ஏதோ சிரிப்புச் சத்தம் கேட்டு தலையை திருப்பிப் பார்த்தாள் அவள். ஒரு அழகான ஜோடி. அந்த தாத்தாவுக்கு என்பது வயது இருக்கும். அந்தப் பாட்டிக்கு அதைவிட நான்கைந்து வருடங்கள் குறைந்திருக்கும். இருவரும் கன்னங்களில் குழி விழுந்து.. தலை முடிகள் நரைத்து… முதுகில் கூண் விழுந்து…. ஆனாலும், வெகு சுவாரஷ்யமாய் எதைப் பற்றியோ பேசிச் சிரித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.
விழியோரம் வியர்த்தது.
தொண்டைக்குள் அடைத்துக் கொண்டது.
கால்கள் நடுங்கின.
ஆனாலும், ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். இதற்குப் பிறகு வரும் வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என்ற அச்சத்தை விட இந்த விவாகரத்து விசயத்தை எப்படி வாப்பாவிடம் சொல்லப் போகின்றோம் என்பதுதான் ஆழ் மனதுக்குள் பெரும் பேராட்டமாக இருந்தது.
அதோ வீடு
வீடு நெருங்க.. நெருங்க.. கால்கள் தமக்குள் பிணைந்து கொள்ளத் தொடங்கின.
நாக்கு மேலண்ணத்துடன் ஒட்டிக் கொண்டது.
ஆனால்,
அவ்வளவு நேரம் செல்லவில்லை.
வீட்டுக்குள் இருந்து அகோரமாக ஒலித்துக் கொண்டிருந்தது உம்மாவின் ஓலம்.
பதறியடித்துக் கொண்டு ஓடிப் போய்ப் பார்க்க… அங்கே பண்பாயில்… நிரந்தரமாகத் தூங்கிக் கொண்டிருந்தார் அவளது வாப்பா.
ஆம், நிரந்தரமாகவே தூங்கிவிட்டார்.
‘ஏன்ட தங்க வாப்பா..!’ என அலறியவாறு வாப்பாவின் மேல் விழுந்து அவரைக் கட்டிக் கொண்டாள் அம்னா. ஆனால், எவ்வளவு அழுதாலும் தங்க வாப்பா கண்களைத் திறந்து பார்க்கவேயில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு பதறியடித்துக் கொண்டு; ஓடி வந்தார்கள். அம்ன கட்டுப்படுத்த பார்த்தார்கள். ஆனால், யாராலும் அவளை அவளது தங்க வாப்பாவிடம் இருந்து பிரிக்க முடியவில்லை. தனது மகள் லேசாக முகம் சுழித்தாலே பதறித் துடிக்கும் வாப்பா அவள் இப்போது பைத்தியகாரி போல தலையை சுவற்றில் அடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்துக் கொண்டு அமைதியாகவே இருந்ததுதான் ஆகப் பெரும் ஆச்சரியமாக இருந்தது.
ஆட்கள் வந்தார்கள்
வாப்பவைத் தூக்கினார்கள்
குளிப்பாட்டினார்கள்
அவருக்கு மெத்தப் பிடித்த வெள்ளாடையை அணிவித்தார்கள்
அன்று பிறந்த குழந்தை போன்று வாப்பா மெல்லினமான மறுமலர்ச்சியோடு தூங்கிக் கொண்டிருந்தார்.
எவ்வளவு நேரம் சென்றது என்று தெரியவில்லை.
‘மழை வரப்போவுது மையத்தைத் தூக்குங்கோ!| என யாரோ கூவினார்கள். அம்னா பரபரக்க ஆரம்பித்து விட்டாள். எங்கிருந்துதான் அவளுக்கு அத்தனை சக்தி வந்ததோ தெரியவில்லை. ஓடி வந்து தங்க வாப்பாவை கட்டியணைத்துக் கொண்டாள். ‘ஏன்ட வாப்பா நான் விட மாட்டேன். ஏன்ட தங்க வாப்பாவ கொண்டு போக நான் விட மாட்டேன்’ என்று அலறியவாறு அவரை இறுக்கப் பிடித்துக் கொண்டாள். இத்தனை நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்தவர்கள் கூட அதனைப் பார்த்து அழ ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால், எவ்வளவு நேரத்திற்கு..
அம்னாவின் தங்க வாப்பாவை..
முதன் முதலாக அவளை கையில் வாங்கிய போது ஒட்டுமொத்த சுவனத்தையும் தனது கைகளில் வாங்கியது போன்று வானத்திற்கும் பூமிக்கும் சந்தோசத்தில் துள்ளிக் குதித்த வாப்பாவை…
தனது மார்பில் கட்டியணைத்துக் கொண்டு தூங்கிய வாப்பாவை…
நிலா காட்டி சோறு ஊட்டிய வாப்பாவை…
காய்ச்சல் வந்து படுக்கும் தனது மகளின் கால்களில் வலிக்காமல் முத்தம் கொடுத்துக் கொண்டு தனக்குள் அழுது தீர்த்த வாப்பாவை…
கல்யாணக் காரில் மகளை ஏற்றி அனுப்பி வைத்து விட்டு சமையலறைக்குள் உட்கார்ந்து விம்மி விம்மியழுத வாப்பாவை…
நான்கைந்து பேர் சேர்ந்து தூக்கிக் கொண்டு செல்ல ஆரம்பித்தார்கள். ‘ஏன்ட வாப்பாவ என்னட்ட தாங்க…!’ என அவள் அலறிய அலறல்தான் வெகுதூரம் கேட்டுக் கொண்டே இருந்தது.




Leave a Reply