தமிழ் மொழியின் வரலாறு
உலகின் மிகப் பழமையான மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழியாகும். அதேபோன்று காலத்திற்குக் காலம் ஏற்பட்ட அழிவுகள், போர்கள், ஆக்கிரமிப்புக்கள் அனைத்தையும் வென்று ‘காலத்தை வென்று வாழும் மொழியாக’ தமிழ் அடையாளப்படுத்தப் படுகின்றது.
இலக்கியம், பண்பாடு, மதம், அரசியல், வர்த்தகம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் கொடி கட்டிப் பறக்கும் தமிழ் மொழியின் சிறப்புக்களைச் சொற்களில் வடித்துவிட முடியாது.
இனம், மதம், தேசம் வரையறைகள் எதுவும் இன்றி உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழ் மொழியின் செல்லச் சிறப்புக்களை எடுத்துக் கூற முனைகின்றது இந்தக் கட்டுரை.
தமிழ் மொழியின் வரலாறு என்பது வெறுமனே ஒரு மொழியின் வரலாறாக மாத்திரமின்றி ஒரு கலாசாரத்தின் வளர்ச்சிக் கதையாகவும் அமைந்துள்ளது.
- தமிழ் மொழியின் ஆரம்ப வரலாறு
தமிழ் மொழி என்பது திராவிட மொழிக் குடும்பத்தின் ஒரு முக்கிய கிளையாகும். ஒரு பக்கம் உலகின் முதலாவது மொழியாக கருதப்படும் தமிழ் மொழி இன்னொரு பக்கம் தென்னிந்தியா மற்றும் இலங்கை மக்கள் பயன்படுத்திய மொழி வழக்கிலிருந்து தமிழ் மொழி உருவாகியிருக்கலாம் என கருதப்படுகின்றது. தமிழ் மொழியின் தொன்மையை நிரூபிக்கும் பல தொல்லியல் ஆதாரங்கள், கல் வெட்டுக்கள் மற்றும் பழமையான தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் எழுத்து வழக்கிற்கான ஆதாரங்கள் பல கிடைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில ஆதாரங்கள் கி.மு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.
சங்க காலம் (கி.மு 300 – கி.பி 300)
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. சங்கம் அமைத்து தங்கத் தமிழ் வளர்த்த இக்காலத்தில் முக்கிய மூன்று சங்கங்கள் காணப்பட்டதாக வரலாறு இயம்புகின்றது. இக்காலத்தில் எழுந்த இலக்கியங்களில் இயற்கை, காதல், வீரம், அரசியல், சமூக வாழ்க்கை போன்றன பாடப்பட்டுள்ளன.
எட்டுத் தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகியவை சங்க இலக்கியத்தின் முக்கிய படைப்புக்களாகும். இந்த நூல்கள் தமிழர்களின் அன்றாட வாழ்வையும் அவர்களின் அற்புத மரபுகளையும் அரசியல் அமைப்புக்களையும் அதே போன்று சமூக நிலைகளையும் பதிவு செய்கின்றன.
சங்க இலக்கியத்தின் இரண்டு முக்கிய பிரிவுகள் காணப்படுகின்றன. - அகம் (உள் வாழ்க்கை – காதல், உணர்வு)
- புறம் (புற வாழ்க்கை – போர், புகழ், வீரம்)
தொல்காப்பியம் மற்றும் இலக்கணப் புன்னகை
தமிழ் மொழியின் முக்கிய பாகங்களாக இலக்கியம் மற்றும் இலக்கணம் என்பன அமைகின்றன. இலக்கண வரலாற்றில் மிகத் தொன்மையான நூலாக தொல்காப்பியம் அமைகின்றது. இது எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களை கொண்டு அமைகின்றது. தமிழ் மொழியின் இலக்கண அமைப்பை முறையாக விளக்கும் முதல் நூல் என தொல்காப்பியம் கொண்டாடப்படுகின்றது. - பிற்கால சங்க காலம் அல்லது காவிய காலம்
சங்க காலம் நிறைவுற்றதைத் தொடர்ந்து பின்னைய காலத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்ற காவியங்கள் உருவாகின. இவற்றுள் புகழ்பெற்ற சிலப்பதிகாரம் தமிழர்களின் சமூக மற்றும் கலாசார நீதிமுறைகளைக் காட்டுகின்றது. காவியங்களின் – குறிப்பாக சிலப்பதிகாரத்தின் வரிகளும் அடிகளும் அக்கால மக்களின் வாழ்வியலைக் காட்டுகின்றன. கதை சொல்லும் மரபு வளர்ச்சியடைந்த இக்காலத்தில் எழுந்த சிலப்பதிகாரம் ‘இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி’ என்ற கூற்றுக்கு முற்றிலும் பொருந்தி அமைகின்றது. - பக்தி இலக்கிய காலம்
இக்காலத்தில் மதத்தின் செல்வாக்கு மொழியை அலங்காரம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ஒரு பக்கம் சைவமும் மறுபக்கம் வைணவமும் இணைந்து தமிழ் பாடல்களை அழகு செய்ய ஆரம்பித்தன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் பக்தி இலக்கியங்களைப் படைக்க ஆரம்பித்தனர்.
பக்தி இலக்கியமே தமிழ் மொழியை மக்களின் பொது மொழியாக்கியது என்றால் அக்கூற்று மிகையாகாது. - நடுநிலை வளர்ச்சிக் காலம்
இக்காலத்தில் தமிழ் அரசுகள் என அழைக்கப்பட்ட சோழர், சேரர், பாண்டியர் கலவி மற்றும் கலைகளை போற்றி வளர்த்தனர். கோயில்கள் வெறுமனே ஆன்மீக தளங்களாக மாத்திரமின்றி கல்வி மையங்களாகவும் கலாசார பீடங்களாகவும் செயற்பட்டன.
இக்காலத்தில் அதிக தமிழ் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டன. நிர்வாகம், வர்த்தகம், தான தருமங்கள் போன்ற விபரங்கள் கல்வெட்டுக்களில் பதிவு செய்யப்பட்டன. - அச்சுத் தொழிலும் மறுமலர்ச்சியும்
தமிழ் மொழி வளர்ச்சியில் அச்சுத் துறையின் வருகை பாரிய மறுமலர்ச்சியை உருவாக்கியது எனலாம். ஏனைய மொழிகளுக்கும் இக்கருத்து முற்றிலும் பொருந்தும். 16ஆம் நூற்றாண்டளவில் அறிமுகமாகிய அச்சுத் தொழில் பெரும்பாலான நூல்கள் தமிழில் வர காரணமாய் அமைந்தது. அதேபோன்று பண்டைய, பாரம்பரிய அற்புதமான நூல்கள் பாதுகாக்கப்படவும் அச்சுக்கலை அடிப்படையாக அமைந்தது. - செம்மொழியான தமிழ் மொழியே
தங்கத் தாய்மொழியான தமிழ் மொழி 2004ஆம் ஆண்டு செம்மொழியாக பிரகடனம் செய்யப்பட்டது. அதன் ஆண்டாண்டுகால தொன்மை, மற்ற மொழிகளை விட துல்லியமான தெரிபடும் தனித்துவம் மற்றும் அள்ள அள்ளக் குறையாத இலக்கிய வளம் காரணமாக இச்சிறப்பு கிடைத்தது. ஆனால், புகழ் மொழிகள் தேடி வந்த போதும் தெவிட்டும் அளவு கிரீடங்கள் கிடைத்த போதும் தமிழ் மொழி தரணி வென்று வளர்ந்து கொண்டே இருக்கின்றது.
இன்று உலகம் முழுவதும் வியாபித்துள்ள தமிழ் மொழி காலத்திற்கேற்றவாறு தன்னை மெருகேற்றிக் கொள்ளவும் தயங்கவில்லை. இலங்கையின் அரச மொழியாக மாத்திரமின்றி வரலாற்றுக் களஞ்சியங்கள் நிறைந்த, அறிவியல் அற்புதங்கள் முதிர்ந்த அழகு மொழியாகவும் தங்கத் தமிழ் மொழி விளங்குகின்றது. - இலங்கையும் தமிழும்
இலங்கையில் முக்கியமாக தமிழர்களும் முஸ்லிம்களும் தமிழால் வாழ்கின்றனர். சிற்சில வேறுபாடுகள் காணப்பட்ட போதும் இரு சாராரையும் தமிழ் இணைக்கின்றது. அதேபோன்று பிரதேசத்திற்குப் பிரதேசம் தமிழ் உச்சரிப்பிலும் பயன்படுத்தும் பதங்களிலும் அழகிய வித்தியாசங்களைக் கண்டு கொள்ள முடியும். எழுத்துத் தமிழின் அழகிய கர்வமும் பேச்சுத் தமிழின் அப்பாவித் தனமும் இணைந்து இலங்கைத் தமிழ்த் தாய்க்கு ஒட்டுப் பிறந்த இரட்டைக் குழந்தைகளாய் சேவகம் செய்கின்றன. ஆறுமுக நாவலர், சி. வை தமோதரம்பிள்ளை, காசி ஆனந்தன், மகாகவி உருத்திர மூர்த்தி, எம். ஏ நுஃமான் … போன்று பல ஆளுமைகள் இலங்கைத் தமிழ் மொழிக்கு சேவகம் செய்துள்ளனர்.
சிலவேளை வெளிநாட்டுக்கான புலம்பெயர்வுகளும் அந்நிய கல்வி மீதான காதலும் இலங்கை மக்களை விட்டு தமிழ் மொழியை தூரமாக்கி விட்டன என்ற குற்றச்சாட்டு ஓரளவு உண்மையாக இருக்கலாம். ஆனால், இலங்கையை விட்டு புலம் பெயர்ந்து சென்றவர்கள் ஒருபோதும் தமது தமிழ் மொழியை வெறுக்கவோ மக்கவோ இல்லை. தமது குழந்தைகளுக்கு இனிக்கும் தமிழ்ப் பெயர்களைச் சூட்டு அழகு பார்க்கின்றனர். தமது வீட்டு மொழிiயாகவும் காதல் மொழியாகவும் தமிழை கொண்டாடுகின்றனர். நாம் ஏற்கனவே சொன்னது போன்று தமிழ் என்பது ஒரு மொழி மாத்திரம் அல்ல. அது கலாசாரமும்தான். ஆகவே, தமது இருப்பிற்காக சில விட்டுக் கொடுத்தல்களை செய்தபோதும் புலம் பெயர்ந்தவர்கள் ஒரு போதும் தமது கலாசாரத்தை கைவிடவில்லை. தம் உயிரை விட ஒரு படி உயர வைத்து கலாசாரத்தை பேணி பாதுகாக்கின்றனர்.
காலத்திற்குக் காலம் சிற்சில பிரச்சினைகளும் சவால்களும் வரும்போது தமிழ் மொழியின் இருப்பைப் பற்றி சில ஆர்வலர்கள் கவலை வெளியிட்டனர். சில ஆட்சிகளைப் பற்றி, சில சினிமா வசனங்களின் போக்குகளைப் பற்றி, சில கலாசார ஆக்கிரமிப்புக்களைப் பற்றி.. ஆனால், அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. வரலாற்றில் இதை விட பாரதூரமான எத்தனையோ சவால்களைக் கடந்து தமிழ் மொழி இன்றளவும் தழைத்து நிற்கின்றது. இதற்குப் பின்னர் அவற்றை விட ஆபத்தான சவால்கள் வந்தாலும் தமிழ் அதனையும் வென்று வாழும். மாறாக, அது ஒருபோதும் மெல்லச் சாகாது.




Leave a Reply