Fayasa Fasil
தாயின் கருவறையில் பத்திரமாய் பவ்வியமாய் ஒரு சிசு வளர்கிறது நிம்மதியான உறக்கம் கொண்டு தன் செயற்பாட்டை அமைத்துக் கொண்டு செயல்படுகிறது. வெளியுலகை எட்டிப் பார்க்கும் தருணம் வரையில் உண்டு உறங்கி நிம்மதியாக இருக்கிறது வெளியுலகை காணும்
தருணம் வீறிட்டு அழுகிறது.
உதிரத்தை பாலாக்கி தன் பசியையும் தூக்கத்தையும் தியாகம் செய்து தன் மூலம் வெளியான ஒரு ஜீவனுக்காக தாய் என்பவள் படும் பாடுகள் கொஞ்சமன்று.
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாய் பாலூட்டி , சீராட்டி தாய் என்பவள் வீட்டில் இருந்து கவனிக்க தந்தை உழைப்பின் மூலம் குடும்பத்தை கவனிக்கிறார்; பாதுகாக்கிறார்.
எந்தப் பிள்ளையும் பெற்றோர் இன்றிய வாழ்வை ஆரோக்கியமாக வாழ்ந்துவிட முடியாது.
எமது பிள்ளைகளை நாம் சிறந்த பிள்ளைகளாக , எதற்கும் துணிந்தவர்களாக , வெற்றியைப் போலவே தோல்வியையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தைரியம் உள்ளவர்களாக வளர்க்க வேண்டும். ஒரு பறவையை எடுத்துக் கொண்டால் தன் குஞ்சுக்கு பறக்க கற்றுக் கொடுப்பதில்லை. தானாகவே பறக்கிறது. விழுகிறது திரும்பவும் எழுந்து பறக்கிறது அது அந்த குஞ்சு கொண்டுள்ள நம்பிக்கை.
அவ்வாறான நம்பிக்கையை எமது பிள்ளைகளுக்கு கொடுக்கிறோமா..? கோழிக்குஞ்சுகளிடம் எதிரிகள் அண்டாது தாய்க்கோழி காப்பாற்றுமே தவிர அவற்றுக்கான உணவை தேடி கொடுக்காது நாம் எமது பிள்ளைகளின் சிந்தனையை கிளற விடுகிறோமா..?
எந்த மீனும் தன் குட்டிக்கு நீச்சலை கற்றுக்கொடுத்து இந்த இடத்தில் உணவு இருக்கிறது போய் சாப்பிட்டு வா என்று கூறியதில்லை எமது பிள்ளைகளுக்கும் அவ்வாறான தேடலுக்கு எம்மிடம் இடம் இருக்கிறதா..? மனதை ஒருநிலைப்படுத்துங்கள்…!! கண்களை மூடுங்கள்..!!
சற்று சிந்தியுங்கள்..!!
ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள்..!!
இப்பொழுது மீண்டும் சிந்தியுங்கள்
எம்மில் பலர் செய்யும் செயல்தான் தன் பிள்ளை மீது அதீத அன்பு கொண்டுள்ளதாக நினைத்துக் கொண்டு அவர்களது சுதந்திரத்தை வீணடித்துக் கொண்டிருப்பர்..
பிள்ளைகள் கீழே விழ வேண்டும்.
விழுந்து செல்ல வேண்டும். அனுபவங்களும் காயங்களும் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும். முன்னேறத்தூண்டும். கலங்கித் தெளியும் குட்டை போல … எமது பிள்ளைகளும் தோல்வியில் வெற்றியடைய பிரார்த்திப்போம்.
உங்கள் பிள்ளைகளை பட்டை தீட்டும் இரத்தினமாக மாற்ற நீங்கள் தயாரா….??!




Leave a Reply