01. புதிய தேசங்கள்
(https://thalamvoice.com/nabigal-vaalkai-varalaru-olukkam-panpaadu– part 01)
சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு – நபியவர்கள் இஸ்லாத்தை பிரசாரம் செய்ய புதிய பிரதேசங்களை தேட ஆரம்பித்தார்கள். அதன் முதற்கட்டமாக தாயிப் நகரத்திற்கு தனக்குத் துணையாக ஸைத் இப்னு ஹாரிதா (ரழி) அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார்கள். அங்கு தலைவர்களை சந்தித்து தனது தூதை எத்திவைத்தார்கள். அங்கும் நபியவர்களுக்கு கேலியும் பரிகாசமும்தான் பதிலாக கிடைத்தன. ‘உங்கள் இறைவனுக்கு தனது தூதராக அனுப்ப உன்னைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?’ என மிக மோசமாக நபியவர்களை கிண்டல் செய்த தாயிப் தலைவர்கள் அத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. சிறுவர்களையும் ஆயோக்கியர்களையும் அழைத்து அவர்களிடம் நபியவர்களை துன்புறுத்துமாறு கூறினார்கள். அவர்களும் நபியவர்களின் பின்னால் சென்று தகாத வார்த்தைகளைப் பேசி கற்களால் தாக்கினர். நபியவர்களின் கல்லடி பட்ட காயங்களில் இருந்து இரத்த ஆறு பெருக்கெடுத்து வழிந்தது. நபியவர்களைப் பாதுகாக்க ஸைத் இப்னு ஹாரிதா (ரழி) அவர்கள் எவ்வளவோ முயன்றும் அது சாத்தியமாகவில்லை.
நபியவர்கள் திரும்பி வந்து ஒரு சோலைக்குள் நுழைந்தார்கள். அவர்கள் நடந்துவந்த பாதை முழுக்க இரத்தச் சொட்டுக்கள் வழிந்திருந்தன. நபியவர்களின் உடல் முழுவதும் காயங்களை நிரம்பியிருந்தன. ஆனாலும், அப்போதும் நபியவர்கள் அல்லாஹ்விடம் இரு கரமேந்தி அந்த மக்களுக்கு வழிகாட்டுமாறே பிரார்த்தனை செய்தார்கள். இந்த மக்கள் என்னை நிராகரித்தாலும் இவர்களது சந்ததிகள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்கள்.
மக்காவில் குறைஷஷpக் காபிர்களின் துன்பங்கள் எல்லையின்றி அதிகரித்துச்சென்ற போது நபியவர்கள் முஸ்லிம்களில் ஒரு சிலரை ஹபஷா எனும் அபிரிக்கா நாட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள்;. அப்போது ஹபஷாவை ஆண்டுகொண்டிருந்த கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த நஜ்ஜாசி மன்னன் மீது நபியவர்களுக்கு நன்மதிப்பு காணப்பட்டது.
ஆகவே, நபியவர்கள் சிலரை ஹபஷாவிற்கு அனுப்பி வைத்தார்கள். முதற்கட்டமாக பன்னிரெண்டு பேரும் இரண்டாம் கட்டமாக எண்பத்து மூன்று பேரும் ஹபஷாவை சென்றடைந்தனர். அவர்களுக்கு நஜ்ஜாசி மன்னர் புகலிடம் கொடுத்தார்.
ஆயினும் கெட்ட குணம் கொண்ட குறைஷpக்காபிர்களுக்கு முஸ்லிம்கள் ஹபஷாவில் நிம்மதியாக வாழ்வது அறவே பிடிக்கவில்லை. அது அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது. ஆகவே, அந்த மக்களை திரும்ப அழைத்து வந்து கொடுமை செய்ய வேண்டும் என விரும்பிய அவர்கள் நன்கு வாதத்திறமை கொண்ட இருவரை பல பரிசுப்பொருட்களுடன் ஹபஷாவிற்கு அனுப்பினார்கள். அந்த தூதுவர்களும் அரச சபைக்குச் சென்று ‘ எங்கள் மக்காவில் இருந்து உங்களிடம் சிலர் வந்திருக்கின்றார்கள். அவர்கள் எங்களது மார்கத்தை விட்டுவிட்டு புதிய மார்க்கம் ஒன்றை பின்பற்றுகின்றார்கள். அவர்களை திரும்ப அழைத்துச்செல்லவே நாம் வந்திருக்கின்றோம்’என கூறினார்கள்.
செய்தி மன்னனின் செவிகளுக்கு எட்டியது. ஆகவே, அவர் தனது நாட்டில் இருந்த முஸ்லிம்களை வரவழைத்தார். முஸ்லிம்கள் கலக்கமடையவில்லை. தமது செய்தியை மன்னனுக்கு எத்திவைக்க ஒரு சிறந்த வாய்ப்பாக இதை கருதினர். முஸ்லிம்களின் சார்பாக அபூதாலிப் அவர்களின் மகன் ஜஃபர் (ரழி) மன்னனோடு பேச ஆரம்பித்தார்.
‘மரியாதைக்குரிய மன்னரே! நாங்கள் அறியாமைக்காலத்தில் வாழ்ந்தோம். நாங்கள் எங்கள் கைகளால் உருவாக்கியவற்றையே வணங்கினோம். இறந்த பிராணிகளை சாப்பிட்டோம். எங்களிடம் அனைத்து தீய விடயங்களும் நிறைந்திருந்தன. உறவினர்களை துண்டித்து வாழ்ந்தோம். அண்டை அயலவர்களுக்கு துன்பம் இழைத்தோம்.
எங்களில் பலவீனமாகவர்களின் சொத்துக்களை பலசாலிகள் அபகரித்துக்கொண்டார்கள். இந்த நிலையில்தான் அல்லாஹ் தனது தூதர் ஒருவரை எங்களுக்கு அனுப்பிவைத்தான். அவரைப் பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும் நாங்கள் அறிவோம். அவர் உண்மையாளர். ஆவரிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருட்களை அவர் பாதுகாப்பார். அவர் கண்ணியமானவர். அவர்தான் ஏக இறைவனான அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தார். நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டோம்.
எங்களை உண்மை பேசுமாறு அவர் கட்டளையிட்டார். அமானிதத்தை பேணுமாறும் உறவினர்களோடு இணைந்து வாழுமாறும் அண்டை வீட்டாரிடம் அன்புடன் நடந்துகொள்ளுமாறும் அவர் அறிவுரை சொன்னார். அநியாயமாக இரத்தத்தை சிந்துவது பற்றி எச்சரித்தார். வெட்கம் கெட்ட செயல்களையும் தேவையற்ற பேச்சுக்களையும் தவிர்க்கும்படி அறிவுரை கூறினார். அனாதைகளின் சொத்துக்களில் எல்லை மீறுவது பற்றியும் ஒழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு சொல்வது பற்றியும் கடுமையாக எச்சரித்தார்.
இவற்றை நாம் எடுத்து நடந்தோம். ஆகவே, நாங்கள் மனிதர்களானோம். இவற்றை பொறுத்துக்கொள்ளாத குறைஷpக் காபிர்கள் எங்களை துன்புறுத்தினர். ஆகவே, அவர்களிடமிருந்து தப்பிக்க நாம் மக்காவை விட்டு வெளியேறி உங்களிடம் தஞ்சமடைந்திருக்கின்றோம்’ என்று ஜஃபர் (ரழி) பேசி முடித்தார்.
இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மன்னர் இறைவேதத்தின் ஏதாவது பகுதியை ஓதிக்காட்டுமாறு கேட்க ஜஃபர் (ரழி) மர்யம் அத்தியாயத்தை ஓதிக்காட்டினார். அவ்வளவுதான். நஜ்ஜாசி மன்னன் தனது தாடி நனையும் அளவு அழ ஆரம்பித்துவிட்டார்.
‘நிச்சயமாக, இதுதான் எங்கள் ஈஸா கொண்டு வந்த மார்க்கமாகும்’ என்ற அவர் குறைஷித் தூதுவர்களை திருப்பி அனுப்பிவிட்டு முஸ்லிம்கள் இனி தனது தேசத்தில் எங்கு வேண்டுமானாலும் நிம்மதியாக வாழலாம் என அனுமதி கொடுத்தார்.
வினாக்கள்
1. நபியவர்களுடன் தாயிப் நகரத்திற்குச் சென்றவர் யார்?
2. முஸ்லிம்கள் சென்ற ஆபிரிக்க நாடு எது?
3. ஹபஷாவை ஆண்டுகொண்டிருந்த மன்னன் யார்?
4. நபியவர்களின் சிறப்புக்களை மன்னனிடம் கூறிய ஸஹாபி யார்?
5. இறுதியாக ஹபஷா மன்னன் கூறிய விடயம் யாது?
02. ஊர் விலக்கு
ஹபஷாவில் அடைந்த தோல்வி குறைஷிக் காபிர்களை கடுமையாக எரிச்சல்படுத்தியது. அதேபோன்று நாளாந்தம் அதிகரித்துவரும் முஸலிம்களின் எண்ணிக்கையும் அவர்களை மிகவும் கவலைப்படுத்தியது. ஆகவே, அவர்கள் நபியவர்களை அவர்களது குடும்பத்தில் இருந்து மொத்தமாக பிரிக்க திட்டமிட்டனர். அதற்காக பனூ ஹாஷிம், பனூ அப்துல் முத்தலிப் ஆகிய இரண்டு குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக மக்காவில் இருந்து விலக்கி வைத்தனர். அந்த குடும்பங்களோடு யாரும் எவ்வித கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட கூடாது எனவும் அந்த குடும்ப உறுப்பினர்களுடன் யாரும் திருமண உறவுகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் தடை விதித்தனர்.
அப்போது அந்த குடும்பங்களின் தலைவராக இருந்த அபூதாலிப் இதனைக்கொண்டு கொஞ்சமும் மனம் தளரவில்லை. அதேபோன்று நபியவர்களை தனியாக விட்டுவிடவும் இல்லை. உடனே தனது குடும்பங்களை அழைத்துக்கொண்டு ஷஷிஃபு அபூதாலிப் என்ற பள்ளதாக்கினுள் ஒதுங்கிக்கொண்டார்.
ஆனால்,
அவர்கள் கொண்டுசென்ற உணவுப் பொருட்கள் சில நாட்களிலேயே தீர்ந்துவிட்டன. பசி, பட்டனி ஆரம்பித்தது. அப்பாவிக் குழந்தைகள் பசியால் அலற ஆரம்பித்தனர். அவர்களை சமாளிக்க முடியாமல் பெண்கள் தவித்தனர். காய்ந்த இலைகளையும் சருகுகளையும் தண்ணீரில் நனைத்து சாப்பிட்டாலும் எத்தனை நாள் இந்தத் துன்பங்களைத் தாங்குவது!
ஆனாலும் என்னதான் நடந்தாலும் முஹம்மத் (ஸல்) அவர்களை தனியாக விட்டுவிடுவதில்லை என்ற விடயத்தில் அனைவரும் உறுதியாக இருந்தனர்.
சொல்லமுடியாத வேதனை அந்த அப்பாவி மக்களை துன்புறுத்தியது. இந்த வேதனை மூன்று வருடங்கள் தொடர்ந்து சென்றது. இறுதியாக ஒரு நாள் அல்லாஹ் அந்த கொடிய துன்பத்தில் இருந்து அனைவரையும் விடுவித்தான்.
வினாக்கள்
1. ஏதிரிகளை கோபப்பட வைத்த விடயம் யாது?
2. காபிர்கள் இறுதியாக எடுத்த மோசமான முடிவு யாது?
3. நபியவர்களும் குடும்பத்தினரும் ஒதுங்கிச்சென்ற பள்ளத்தாக்கு யாது?
4. பள்ளத்தாக்கில் நபியவர்களின் குடும்பம் எவ்வளவுகாலம் இருந்தது?
5. பள்ளத்தாக்கில் நபியவர்களின் குடும்பம் அனுபவித்த துன்பம் யாது?
03. துன்பத்தின் வருடமும் அழகிய பரிசும் (சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு)
ஊர் விலக்கில் இருந்து விடுபட்ட பலர் மிக மோசமாக உடல்நலம் இழந்தார்கள். அவர்களுள் முக்கியமானவர் அபூதாலிப். சில நாட்களிலேயே அவர் இறந்துவிட நபியவர்கள் இடிந்துபோனார்கள்;. ஆனால், சோதனை இப்போதும் முற்றுப்பெறவில்லை. இன்னும் சில மாதங்களில் அன்னை கதீஜா நாயகி அவர்களும் அல்லாஹ்விடம் மீண்டு விட்டார்கள்.
நபியவர்கள் முற்றாக இடிந்துபோனார்கள்.
இத்தனை நாட்களாக முஹம்மத் (ஸல்) அவர்களின் வலது பக்கமும் இடது பக்கமும் நின்று தோள்கொடுத்தவது அபூதாலிப் அவர்களும் அன்னை கதீஜா நாயகியும்தான். கொடிய எதிரிகள் எத்தனையோ தடவை வீட்டுக்கு வந்து கதவு தட்டி எச்சரித்தபோதும் கொடிய பள்ளத்தாக்கில் மூன்று வருடங்கள் போட்டு சித்திரவதை செய்த போதும் எப்போதும் முஹம்மத் (ஸல்) அவர்களை விட்டுக்கொடுக்காத அற்புத மனிதர் அவர். அவருக்கு சற்றும் குறைவில்லாமல் தனது அன்புக் கணவரை ஆதரித்து அரவணைத்த அன்பு மனைவிதான் அன்னை கதீஜா. தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் இஸ்லாத்திற்காக தந்த உத்தமி அவர்கள். ஆனால், இப்போது அந்த இருவரும் இல்லை.
இந்த செய்தி கேட்ட எதிரிகளின் கொண்டாட்டத்தை கேட்கவும் வேண்டுமா? அவ்வளவுதான்! நபியவர்களின் கதை முடிந்தது என அவர்கள் அகம் மகிழ்ந்தனர். ஆனால், பாவம் அவர்கள். அல்லாஹ்வின் அன்பைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியப்போகின்றது!
அல்லாஹ் தனது அன்புத்தூதரை தனது வானுலத்திற்கு அழைத்தான்.
ஒரு நாள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் முன் தோன்றி புராக் வாகனத்தில் ஏற்றி முதலில் பலஸ்தீனில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் சென்றார்கள். பின் அங்கிருந்து வானுலகிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ஏழு வானங்களைக் கடந்து சுவன, நரகங்களைப் பார்த்து அல்லாஹ்வுடன் உரையாடி தமக்கும் தம்மைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் ஐவேளை தொழுகையை பரிசாகப்பெற்று அடுத்தநாள் விடிவதற்குள் திரும்பிவிட்டார்கள். இந்தப் பயணம்தான் வரலாற்றில் மிஃராஜ் பயணம் என்று அழைக்கப்படுகின்றது.
மற்ற கடமைகள் அனைத்தும் பூமியில் கடமையாக்கப்பட தொழுகை மாத்திரம் விண்ணுலகில் கடமையாக்கப்பட்டது.
வினாக்கள்
1. நபியவர்கள் இழந்த முக்கியமான உறவுகள் எவை?
2. மிஃராஜ் பயணம் என்றால் என்ன?
3. கதீஜா நாயகியின் சிறப்பு யாது?
4. அபூதாலிப் அவர்களின் சிறப்பு யாது?
5. தொழுகையின் சிறப்பு யாது?
04. மதீனாவை நோக்கி (சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு)
நபியவர்கள் ஹஜ்ஜுடைய காலங்களில் ஒவ்வொரு மக்கள் கூட்டங்களுக்கும் செல்வார்கள். அங்கு சென்று அல்லாஹ்வைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் எடுத்துரைப்பார்கள். ஆனால், அவர்களின் பின்னாலேயே செல்லும் அபூலஹப் ‘மக்களே, அவரை ஏற்றுக்கொள்ளாதீர்கள். அவர் நமது கடவுள்களான லாத், உஸ்ஸா போன்றவர்களை பழிக்கின்றார்’ என்று கூறுவான். ஆனால், இதற்கு மாற்றமாக ஒரு நாள் ஒரு விடயம் இடம்பெற்றது.
மக்காவில் இருந்து தொலைவில் யத்ரிப் எனும் பிரதேசம் அமைந்திருந்தது. அங்கு அவ்ஸ், கஸ்ரஜ் எனும் மக்கள் வாழ்ந்தனர். அது ஓர் அழகிய கிராமமாகும். அந்தக் கிராமத்தைச் சுற்றி அழகிய பேரீச்சை மரத்தோட்டங்கள் நிறைந்திருந்தன. அங்கிருந்த வந்திருந்த சிலர் நபியவர்களைச் சந்தித்தார்கள். யத்ரிப் வாசிகள் ஏற்கனவே பல்லாண்டுகாலம் தமக்கிடையே போர் செய்து முற்றாக களைத்துப்போய் தம்மை மீட்க யாராவது வர மாட்டார்களா என தவித்துக்கொண்டிருந்தார்கள். அதேபோன்று அவர்களோடு வாழ்ந்துகொண்டிருந்த யூதர்களும் ‘இறுதி நபி வருவதற்கான நாள் நெருங்கிவிட்டது’ என அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
நபியவர்கள் வழமை போன்று அவர்களுக்கு உரையாற்றிக்கொண்டிருக்கும்போது யத்ரிப் மக்கள் ‘இவர்தான் யூதர்கள் சொல்லும் இறுதி நபி’ என தங்களுக்குள் முனுமுனுத்துக்கொண்டார்கள். அதேபோன்று தமது பிரச்சினைகளை விட்டு மீட்டெடுக்க ஒருவர் வந்துவிட்டார் என தமக்குள் மகிழ்ந்துகொண்டார்கள்.
நபியவர்களின் உபதேசத்தை யத்ரிப் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு மேலதிக விளக்கங்களை கற்றுக்கொடுக்க முஹம்மத் (ஸல்) அவர்கள் முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களை மதீனாவுக்கு அனுப்பினார்கள். யத்ரிப் முழுவதும் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றியே அனைவரும் உரையாடினார்கள்.
ஆகவே அடுத்த வருடம் நபியவர்களுக்கும் யத்ரிப் மக்களுக்கும் ஒரு உடன்படிக்கை ஏற்பட்
அதில்
• அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கு இணை வைக்கக் கூடாது.
• முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவரோடு மக்காவில் இருந்து வருவோருக்கும் ஆதரவும் பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
• சாதகமான சூழ்நிலையிலும் பாதகமான சூழ்நிலையிலும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும்.
• அல்லாஹ்வின் மார்க்கத்தை நடைமுறைப்படுத்துவதில் எக்காரணம் கொண்டும் பின்வாங்கக்கூடாது
போன்ற நிபந்தனைகள் முக்கியமானவை. இதனைத் தொடர்ந்து மக்காவில் வாழ்ந்த முஸ்லிம்கள் படிப்படியாக யத்ரிபை நோக்கி புலம்பெயர ஆரம்பித்தார்கள்.
வினாக்கள்
1. யத்ரிபில் வாழ்ந்த மக்கள் யார்?
2. யத்ரிபுக்கு அழகு சேர்த்த விடயம் யாது?
3. யூதர்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்த விடயம் யாது?
4. நபியவர்களுக்கும் யத்ரிப் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற உடன்படிக்கையின் நிபந்தனை ஒன்று தருக
5. யத்ரிப் மக்கள் ஏன் களைத்துப்போயிருந்தனர்?
05. இருட்டுக்குகை வாசலில் ஒரு சிலந்தி வலை (சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு)
நிலமை கைமீறிச் செல்வதை உணர்ந்த மக்காவாசிகள் இறுதியாக ஒரு கொடிய தீர்மானத்திற்கு வந்தார்கள். அதுதான் நபியவர்களைக் கொல்வது,…அதற்காக ஒன்றுகூடல் ஒன்றை மேற்கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு திறமையான, வலுவான வாலிபனைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் நபியவர்களை அந்த இளைஞர்கள் ஒரே நேரத்தில் கொன்றுவிட வேண்டும் என தீர்மானம் செய்யப்பட்டது
அல்லாஹ் இந்த திட்டத்தை நபியவர்ளுக்கு அறிவித்தான். அதேபோன்று நபியவர்களையும் யத்ரிப்க்கு செல்ல ஆணையிட்டான்.
அன்று இரவு
மக்காவில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் கொடிய ஆயுதங்களுடன் நபியவர்களின் வீட்டை சுற்றி வளைத்தார்கள். நீண்ட நேரம் காத்திருந்தார்கள். ஆனால், நபியவர்களோ தனது படுக்கையில் அலி (ரழி) அவர்களை தூங்க வைத்துவிட்டு தனது அருமைத்தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களுடன் மதீனாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். இவ்வாறு நபியவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்ற பயணமே ஹிஜ்ரத் என அழைக்கப்படுகின்றது.
வழமையாக மக்கள் செல்லும் பாதையை தவிர்ந்து நபியர்வளும் அபூபக்கர் (ரழி) அவர்களும் வித்தியாசமான பாதையில் சென்றார்கள். இடையில் காணப்பட்ட தவர் குகைக்குள் இருவரும் தஞ்சம் புகுந்தார்கள். மக்காவாசிகளின் தகவல்களை கொண்டுவரும் பொறுப்பு அப்துல்லாஹ் அவர்களுக்கும் இருவருக்கும் உணவு கொண்டுவரும் கடமை அஸ்மா நாயகிக்கும் வழங்கப்பட்டது.
தாம் ஏமாற்றப்பட்ட செய்தியை மக்கா காபிர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. உடனே, தப்பிச்சென்றவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு நூறு ஒட்டகம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார்கள். அந்த செய்தியைக் கேட்ட மக்காவாசிகள் ஆளுக்கொரு திசையில் நபியவர்களையும் அபூபக்கர் (ரழி) அவர்களையும் தேடிச்சென்றனர். அவர்கள் தங்கியிருந்த தவர் குகை வாசலுக்கும் வந்தனர். ஆனால், அல்லாஹ் அந்த குகை வாசலை சிலந்தியால் வளை நெய்ய வைத்தும் அதன் வாசலில் புறா ஒன்றை முட்டையிட வைத்தும் அவர்களை காப்பாற்றிவிட்டான்.
அடுத்த நாள் காலை நபியவர்களின் பயணம் ஆரம்பமானது.
வழியில் காணப்பட்ட உம்மு மஉபது என்ற பெண்ணின் தங்குமிடத்தில் சற்று இளைப்பாறிவிட்டு நீண்ட தூரம் பயணம் செய்து குபா என்ற இடத்தை வந்தடைந்தார்கள். அங்கு சிறிது இளைப்பாறிவிட்டு தொழுவதற்காக சிறிய பள்ளி ஒன்றையும் கட்டிவிட்டு யத்ரிபை நோக்கி புறப்பட்டார்கள்.
நாம் எவ்வாறு பெருநாளைக்குரிய பிறையைக் காண ஆவலாக இருப்போமோ அதேபோன்று யத்ரிப் வாசிகளும் பல நாள் தமது எல்லையில் வந்து நின்று நபியவர்களை காண காத்திருந்தார்கள். நபியவர்களைக் கண்டதும் அவர்களது மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இருக்கவில்லை. வரவேற்புப்பாடல் இசைத்தும், வாழ்த்துக் கூறியும் நபியவர்களை வரவேற்றார்கள்.
அன்றிலிருந்து அந்த பூமி மதீனதுன் நபி என அழைக்கக்கப்பட்டது. அதனைத்தான் நாம் சுருக்கமாக மதீனா என அழைக்கின்றோம். நபியவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்ற வருடமே எமது ஆண்டுக் கணிப்பீட்டின் முதலாவது வருடமாக அமைகின்றது.
வினாக்கள்
1. மக்காவாசிகள் தீட்டிய மோசமான திட்டம் யாது?
2. ஹிஜ்ரத் பயணம் என்றால் என்ன?
3. நபியவர்கள் தங்கியிருந்த குகை யாது?
4. நபியவர்கள் முதன் முதலாக எங்கு பள்ளிவாசல் கட்டினார்கள்?
5. மதீனாவாசிகள் நபியவர்களை எவ்வாறு வரவேற்றார்கள்?
(சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு)




Leave a Reply