ரமழான் எட்டிப் பார்த்திருக்கின்றது. இந்த நாட்களில் எவ்வாறு நாம் இந்த அழகிய நாட்களை பயன்படுத்தலாம் என்று ஆயிரம் திட்டங்களைத் தீட்டியிருப்போம். இதே நேரத்தில் எமது குழந்தைகளுடன் எவ்வாறு அந்த அற்புத நாட்களை அழகிய முறையில் கழிக்கலாம் என்பது பற்றிய சில கதையாடல்களைத் தருகின்றோம்.
- நோன்பின் நோக்கம் பற்றி குழந்தைகளோடு கலந்துரையாடல்
நோன்பின் சட்டதிட்டங்கள் பற்றியும் அதனால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் எமது குழந்தைகளோடு அளவளாவும் நாம் நோன்பின், எமக்கு விதிக்கப்பட்ட கடமைகளின் நோக்கம் பற்றியும் அவற்றினால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அவர்களோடு உரையாட வேண்டும்.
நோன்பு எமக்கு இறையச்சத்தைத் தரும் என்று அல்லாஹ் ஸுரா பகராவில் குறிப்பிடுகின்றான். இறையச்சம் என்பது அல்லாஹ்வின் மீதான அச்சமும் அல்லாஹ் மீதான நேசமும் ஆகும். அதுவே எம்மை பாவங்களில் இருந்து பாதுகாக்கின்றது. அதுவே எம்மை இபாதத்துக்களின் பக்கம் கட்டியிழுக்கின்றது. - அல்லாஹ் பற்றி அதிகம் உரையாடல்
நோன்பு சில பொழுதுகளில் எமக்கு கடும் பிஸியான காலமாகும். ஆனால், குழந்தைகளுக்கு ஓரளவு ஓய்வு கிடைக்கும். இந்த நாட்களை நாம் எமது குழந்தைகளோடு அல்லாஹ்வைப் பற்றி உரையாட ஒதுக்கிக் கொள்ளலாம். அதிகம் தேடத்தேவையில்லை. அல்குர்ஆனிய கதைகளை எடுத்துக் கொண்டாலே அல்லாஹ்வைப் பற்றி எமது குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல ஏகப்பட்ட கதைகள் இருக்கும். - சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்
பல இடங்களில் சிறுவர்களுக்காக பல ரமழானிய நிகழ்ச்சிகள் இடம்பெறத்தான் செய்கின்றன. ஆனால், அவை எந்தளவு தூரம் எமது குழந்தைகளுக்கு பொருத்தமானது என்பதை பார்க்கத்தான் வேண்டும். ஆகப் பிரபலமான ஒருவரை மேதாவித்தனமாக கொண்டு வருவதை விட சிறுவர்களுக்குப் பொருத்தமான ஒருவரை கொண்டு வந்து மாணவர்களின் மனதில் ஆழமாக பதியும் வகையில் நிகழ்வுகளை நடாத்துதல் பொருத்தமானது. - குடும்பவியல் குர்ஆனிய ஓதல்கள்
குடும்பமாக உட்கார்ந்து குர்ஆன் ஓத ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொள்வது சிறந்ததாகும். இது குழந்தைகளுக்கு மகிழ்வான நிகழ்வாகவும் அவர்களை உற்சாகமூட்டும் விடயமாகவும் இருக்கும். - வாசிப்பை அன்பளித்தல்
எமது குழந்தைகள் வாசிப்பை பழகிக் கொள்ள ரமழான் அற்புத சந்தர்ப்பமாகும். ஆனால், அவர்களுக்கு அதற்குப் பொருத்தமான புத்தகங்கள் வேண்டும். சிலவேளை நாம் புத்தகத் தேர்வில் விடும் தவறுகள் எமது குழந்தைகளுக்கு வாசிப்பு பற்றிய விருப்பை மொத்தமாக பொசுக்கி விடவும் கூடும்.




Leave a Reply