இது உங்களின் குரல்களுக்கான தளம்

நாவல் – ஒரே ஒரு மகள் அத்தியாயம் 03

4–5 minutes

அம்னா பல்கலைக்கழகத்திலிருந்து வந்து ஒரு வாரம் கழிந்து விட்டது. இன்னும் வகுப்புக்கள் ஆரம்பிக்க பத்து நாட்கள் இருந்தன.

அன்று அவளின் பிறந்த நாள்.

அந்தி சாய்ந்து கொண்டிருந்தது. பெயர் தெரியாத பறவைகள் பெருங்குரலெடுத்து கானம் இசைத்துக் கொண்டிருக்க அடி வானில் அப்பிக்கிடந்த இளஞ்சிவப்பு நிறம் கொஞ்சம் கொஞ்சமாக சாயமிழந்து கொண்டிருந்தது. தென்றல் காற்று கொஞ்சம் நனைந்திருந்ததால் அதன் வருடல் இதமாகிக் கொண்டிருந்தது.

அம்னா முன்னால் ஏறி அமர்ந்திருக்க வாப்பா சைக்கிளை ஊன்றி ஊன்றி மிதித்துக் கொண்டிருந்தார். அவரின் வியர்வை வாசம் காற்றில் கரைந்து அம்னாவின் நாசிக்குள் நுழைந்தது அவளது உயிரை நனைத்தது. அம்னாவுக்கு வாப்பாவின் வியர்வை வாசம் ரொம்பவுமே பிடிக்கும். என்னதான் புதிய புத்தகத்தின் நடுப்பக்க வாசினையின் மீதும் பெற்றோல் வாசனையின் மீதும்  மழை பெய்யும்போது ஜன்னல் கம்பிகளை கடந்து வரும் மண்வாசனையின் மீதும் ஓர் ஈர்ப்பு இருந்தாலும் அவை எதுவும் வாப்பாவின் வியர்வை வாசத்திற்கு முன்னால் ஈடாக முடியாது என அவள் நம்பிக்கொண்டிருந்தாள். சிலநேரம் வாப்பா வேலைகளுக்காக வெளியூர் சென்று தங்கிவிட்டால் வாப்பாவின் சட்டை ஒன்றை எடுத்து தலையணையைச் சுற்றி வைத்துத்தான் தூங்குவாள்.

வாப்பாவின் நெற்றி முழுக்க முத்து முத்தாக வியர்வைத் துளிகள். பின் பக்க சேர்ட்டையும் மொத்தமாக நனைத்துவிட்டு வியர்வை ஆறு கரை புரண்டோடிக் கொண்டிருந்தது. ஆனாலும், எதையும் அலட்டிக்கொள்ளாமல் தனது ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி அவர் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தார்.

‘ஏன் மகள் இன்டைக்கு திடீர் என்று உங்களுக்கு சைக்கிள்ல போகனும் என்று ஆசை வந்த’ என்று கேட்டார்.

‘நான் சின்ன வயசாக இருக்கும்போது நீங்க ஒவ்வொரு நாளும் என்னை நேர்சரிக்கு இந்த சைக்கிள்லதானே கூட்டிட்டுப் போவீங்க. அதற்குப் புறகு இப்படியொரு சான்ஸ் கிடைக்கவேயில்லையே. என்னதான் நீங்க பைக்ல கூட்டிட்டுப் போனாலும் சைக்கள் போல வராது வாப்பா’ என்றாள் அம்னா.

சைக்கள் அசைந்தாடிச் சென்று கொண்டிருந்தது. அம்னாவின் கேசங்கள் காற்றில் கரைந்து வாப்பாவின் முகத்தில் மோதி தொந்தரவு செய்து கொண்டிருந்தன.

மகள் சொன்னதைப் பற்றி வாப்பா அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அவருக்கு தன் மகளைப் பற்றியும் அவளது செல்லக் கிறுக்குத்தனங்களைப் பற்றியும் நன்றாகத் தெரியும். மழை பெய்யும் போது ஐஸ்கிரீட் கேட்டு அடம்பிடிப்பதும் வீதியில் கண்ட காலொடிந்த நாயை நினைத்து நாள் முழுக்க ஒப்பாரி வைப்பதும் கோபத்தில் சொன்ன ஒற்றை வார்த்தையை நினைத்து நாள் முழுக்க அறைக்குள் அடைபட்டு விம்மிக் கொண்டிருப்பதும் அம்னாவுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. அந்த வரிசையில்தான் தான் சிறு குழந்தையாக இருக்கும்போது தான் அனுபவித்த ஒவ்வொரு இன்பங்களையும் இப்போது கேட்டுக் கேட்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்றாள். அதுவும் பாடசாலை படிப்பு முடிந்து பல்கலைக்கழகம் நுழைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட அவள் இப்போதும் சிறுகுழந்தைதான்.

பேரப் பிள்ளைக்கே பேரப்பிள்ளை பிறந்தாலும் பெண்களின் மனதுக்குள் மறைந்திருக்கும் அந்த சிறுபிள்ளை கதாப்பாத்திரம் ஒருபோதும் மறைவதில்லையே..

ஒரு மாதத்திற்கு முன்பே தனது பிறந்த நாளுக்கு தனக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று பெரிதொரு பட்டியலே தயார் செய்துவிட்டாள். அப்பாவிடம் இரண்டு லீட்டர் வெனிலா ஐஸ்கிரீம். உம்மம்மாவிடம் குலாப் ஜாமூன், என நீண்டு சென்ற அவளது பட்டியிலில் வாப்பாவிடம் கேட்ட விடயம்தான் தன்னை சைக்களில் ஏற்றிக்கொண்டு ஊர் முழுக்க சுற்றிக் காட்ட வேண்டும் என்று. அவரால் மறுக்கவா முடியும். மகள் கேட்ட உடனே தலையசைத்து சம்மதம் தெரிவித்துவிட்டார். ‘வயசுக்க வந்த புள்ளய சைக்கள்ள ஏத்திட்டு போனால் பார்க்குறவங்க என்ன சொல்வாங்க’ என்று வழமை போல உம்;மா பொருமினாலும் தனது மகளின் ஆசையை மறுக்க அவருக்கு மனது வரவில்லை.

அம்னாவின் மனது முழுக்க பழங்கால நினைவுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தன.

நேர்சரிக்கு அம்னாவை எழுப்புவதே மிகப்பெரும் போராட்டம். அவளை எழுப்பி, முகம் கைகால் கழுவ வைத்து ஆடை அணிவிப்பதற்கிடையில் உம்மா மொத்தமாக களைத்துப் போய் விடுவார். சிலவேளை அம்னாவுக்கு அன்புப் பரிசுகளாக முதுகில் இரண்டு அறைகளும் விழும். ஆனால் வாப்பா அப்படியல்ல. தனது செல்ல மகளின் கண்களின் ஓரமாக ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தாலும் அவருக்கு மனது பொசுங்கிவிடும். மனைவியை ஒரு பக்கம் தள்ளிவிட்டு தானே தனது மகளை ரெடியாக்கி சைக்களில் உட்கார வைத்து அழைத்துப் போவார். போகும்போது ஏகப்பட்ட கதைகளும் சொல்வார். ‘ஒரு காட்டுக்குள்ள மகள் சிங்கம் ஒன்று இருந்துச்சாம்’ என அந்தக் கதைகள் தொடங்கும்.

திடீரென்று அம்னாவின் கண்கள் பளிச்சிட்டன.

சற்றுத்தொலைவில் ஆட்டுக் குட்டிகள் அசைந்தாடிச் சென்று கொண்டிருந்தன. அவற்றின் இறுதியாக சென்று கொண்டிருந்த, பாலில் தொப்பலாய் நனைந்தது போல வெள்ளை வெளீர் என்று சென்று கொண்டிருந்த ஆட்டுக்குட்டி அம்னாவின் கண்களில் பட்டுவிட்டது. அதற்குப் பிறகு கேட்கவா வேண்டும். ‘வாப்பா அந்த குட்டிய மட்டும் எனக்கு கொண்டு வந்து தாரீங்களா! தொட்டுப் பார்த்துட்டு தந்துடுறன்’ என சிறுபிள்ளையாய் கெஞ்சினாள். மறுக்கும் உரிமைதான் வாப்பாக்களுக்கு இல்லையே! அவரும் மெதுவாக புன்னகைத்துவிட்டு சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த ஆட்டுக்குட்டியைப் பிடிக்க ஓடினார். அதுவும் அவரின் கைகளில் அகப்படாமல் இருக்க பற்றைக் காடுகளுக்குள் புகுந்து புகுந்து ஓடியது. வாப்பா விடவில்லை. அவரும் பின்னால் துரத்தினார்.

‘வாப்பா.. அதை விட்டிடாதீங்க… இன்னும் இன்னும் வேகமாக ஓடுங்க..’ என அம்னா கூவிய கூவல் வாப்பாவின் வேகத்திற்கு மின்சாரம் பாய்ச்சியது.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

காணும் கனவுகள் அனைத்தும் பொய்யில்லை என அவளும் நம்ப வேண்டி வந்தது.

எங்கிருந்தோ ஒரு எருது ஓடி வந்தது. அது ஓடி வந்த மூர்க்கத்தனமான வேகத்துடன் நாலு கால் பாய்ச்சலில் வரும் அதனைக் கண்டு அம்னா ‘வாப்பா’ என்று அலறி முடிப்பதற்கிடையில் அனைத்துமே நடந்து முடிந்துவிட்டன.

கட்டுக்கடங்காமல் ஓடி வந்த அந்த எருது வாப்பாவை மோதி, தனது கொம்பால் அவரது வயிற்றைக் கிழித்து மறுபக்கம் தூக்கியெறிந்துவிட்டு சென்றுவிட்டது. பதறியடித்துக் கொண்டு அம்னா ஓடிச் சென்று பார்க்க, வாப்பா இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார். அவரது வெள்ளை சேர்ட் மொத்தமாக இரத்தில் நனைந்திருந்தது. அவரது நாவு மட்டும் ‘ஒன்றுமில்ல மகள் ஒன்றுமில்ல மகள்’ என்று அசைந்து கொண்டிருந்தது.

அம்னாக்கு தலை சுற்றத் தொடங்கிவிட்டது.

அந்த வலியிலும் வாப்பா ‘ஒன்றுமில்லை மகள்… ஒன்றுமில்லை மகள்..’ என்று அலறிக் கொண்டிருப்பதும் தூரத்தில் யாரோ அலறியடித்துக் கொண்டு வருவதும் மங்கலாக விளங்கின. அதற்குள் மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள்.

கண் முழித்துப் பார்க்க…

வாப்பாவை வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள்.

என்ன நிலவரம் என்று யாருக்கும் புரியவில்லை. யாரிடம் கேட்டாலும் ஏதோ மழுப்பிவிட்டு சென்று கொண்டிருந்தார்களே தவிர யாரிடமும் ஒழுங்கான பதில் இல்லை. இதற்கு மேல் அழ அம்னாவிடம் சக்தியில்லை. அழுது அழுது கண்கள் சிவந்து கன்னங்கள் வீங்கிப் புடைத்திருந்தன. திடீரென வாப்பாவுக்கு சிகிச்சையளிக்கும் அறையிலிருந்து நெர்ஸ் கொண்டு வந்த பொருளை பார்த்த அவளுக்கு ஒற்றை நொடியில் உயிரே உறைந்து விட்டது. அது வாப்பாவின் சேர்ட். அதுவும் இரத்தத் துளிகள் சிதறியிருந்த சேர்ட். கனவில் வந்து அவளை கலங்க வைத்த சேர்ட்.. அப்படியென்றால்… அப்படியென்றால்… கனவுல வந்த மாதிரியே வாப்பாவுக்கு ஏதாவது ஆகிடுமா என அதிர்ந்து போனாள்.

அதற்கு மேல் அவளால் முடியவில்லை. வாய்விட்டே அழ ஆரம்பித்துவிட்டாள்.

எவ்வளவு நேரம் சென்றது என்று தெரியவில்லை.

தலைவிரி கோலமாய் விக்கித்துப்போய் உம்மாவின் மடியில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள். அப்படியே தூங்கிப்போய் விட்டாள்.

யாரோ அவளது தோள்களைத் தொடுவது தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்து பார்க்க நேர்ஸ் நின்று கொண்டிருந்தார்.

‘அம்னா நீங்க தானே!’

‘ம்’

‘உங்க வாப்பா உங்களைப் பார்க்கனுமாம்’

அவ்வளவுதான். அம்னாவின் மனநிலையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. சடாரென்று எழுந்து நேர்ஸோடு ஓடினாள். அவளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத நேர்ஸும் தொங்கோட்டம் ஓடிக்கொண்டு வந்தார்.

வாப்பா கட்டிலில் சாய்ந்திருந்தார். தலையிலும் வயிற்றிலும் பென்னம் பெரிய கட்டுக்கள் போடப்பட்டிருந்தன. கன்னத்திலும் சிராய்ப்புக் காயம். தனது செல்ல மகளைக் கண்டதும் வலியை விழுங்கிவிட்டு ரொம்பச் சிரமப்பட்டு புன்னகை ஒன்றைத் தேடியெடுத்து தனது இதழ்களில் தவழ விட்டார்.

‘வாப்பா!’ என விம்மிய அம்னாவின் கைகளை வாப்பா இறுக்கமாக பிடித்துக் கொண்டார். ‘எனக்கு ஒன்றுமில்ல மகள். சின்னக் காயம்தான். இரண்டு நாள்ள வாப்பா வீட்டுக்கு வந்துடுவன். பிறந்த நாள்ள மகள் அழக்கூடாது தானே!’ என கண்களால் சிரித்தார்.

‘என்னாலதானே வாப்பா.. உங்களுக்கு எல்லாம்’ என இழுத்தாள் அவள்

வாப்பா கண்களால் புன்னகைத்தார். ‘என்ன மகள் இது. அல்லாஹ்ட நாட்டம் நடந்துட்டு, நீங்க தங்கப் புள்ள போல கன்னத்தை துடைச்சிட்டு உம்மாவை சமாதானப்படுத்துங்க’ என்றார்.

அம்னாவை அதற்கு மேல் அங்கு நிற்க தாதி அனுமதிக்கவில்லை. இறுதியாக வாப்பாவின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு திரும்பி வந்தாள்.

ஆனால் வாப்பா வீட்டுக்கு வர இரண்டு மாதங்களாகிவிட்டன.

(தொடரும்)

One response to “நாவல் – ஒரே ஒரு மகள் அத்தியாயம் 03”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

படிப்பினைகள்

அத்திப்பழம் என்பது அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றான சத்துக்கள் நிறைந்த பழமாகும். இஸ்லாமியப் பார்வையில் அத்திப்பழத்திற்கு ஒரு முக்கியமான சிறப்பு உள்ளது. குறிப்பாக, அல்லாஹ் அத்திப்பழத்தின் மீது சத்தியம்…

பெண் என்பவள்”

🌙 ஒரு பெண்ணின் வாழ்க்கை — இஸ்லாமியப் பார்வையில் ஒரு பெண்ணின் உள்ளத்தோடு பேசும் ஆழமான சிந்தனை… 🌷 ஒரு பெண் என்பவள் வெறும் அழகால் வர்ணிக்கப்பட…

மருத்துவம் எங்கே?

மனிதன் மன உளைச்சலுக்குள்ளாகும் போது, இஸ்லாமிய முறையில் சிகிச்சைகள் அல்லாஹ்வை நினைவு கூறுதல் (திக்ர்)أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ“அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலமே உள்ளங்கள் அமைதி…

விரிசல்

இன்றைய கால கட்டத்தில்மனிதனுக்கு உறவுகளுடன் இருக்கும் இணக்கம் குறைந்து வருவதற்கு காரணம் என்ன? பண மோகமா? அதிகார திமிரா? • இஸ்லாமிய கண்ணோட்டத்தில், உறவுகளின் இணக்கம் குறைவதற்கு…

சில வரிகள்….

நான் முன்பு இழந்தவைகளை ருசித்துப்பர்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.பின் நல்லவைகள் எதையும் இழக்கக்கூடாது என்று ஒரு ஏக்கம். “இவை உலக ஆசைகளா?” என்று எண்ணிப்பார்த்த போது,ஒன்று…

ஒரு மாற்றத்திற்காக…

முயன்று பார்க்காமல் முடியாது என்று சொன்ன அவளது இதயம் – இன்று முழுமையடைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணமோ அவள் அன்னை மட்டுமே!!! தாயே, செவி சாய்க்க மறுக்கவில்லை,…

அதற்குள் அஹ்மத் “ நீ என்ன வெளியே நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறாய், கனவு கண்டது போதும் சாமங்கள எடுத்துவெக்க எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றான். “ ச்சே!!…

பாரிஸ் ஹாஜியாரும் மீராவும் அவசர அவசரமாக சாமான்களை எடுத்துச்சென்றனர்.லாரியில் வந்தவருடன் பாரிஸ் ஹாஜியார் எரிச்சலா மற்ற மூவரும் காரில் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆஹா!! என்ன பிரமாண்டமான…

கணவனையும் பிள்ளைகளையும் எழுப்பிவிட்டு அவசரமாக வேலைகளை முடிக்க தயாரானாள். ஹாஜியாரும் எழுந்து குளித்துவிட்டு மனைவிக்கு ஒத்தாசையாக விரையும் போது நேரம் எட்டு மணியாகியிருந்தது. வெளியே வாகன ஹார்ன்…

”ரீசா ! வாப்பா சொன்னது கேட்டுச்சு தானே? பாத்து நடந்துக்கோங்க.ஏதாவது பிரச்சினை இருந்தா வந்து பேசுங்க. அதிகமா போன் பாக்க வானம் சரியா?,இப்போ போய் தூங்குங்க “…

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள