February 24, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

ஒரே ஒரு மகள் அத்தியாயம் 02

8–12 minutes

ஐந்து வருடத்திற்கு முன்னால்…


அப்போது அம்னா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் படித்துக் கொண்டிருந்தாள். வாழ்க்கை எழுத்துப் பிழைகளற்ற கவிதை போன்று அழகாகவே சென்று கொண்டிருந்தது. சிறு பள்ளம் மேடுகளைக் கடந்து செல்லமான சினுங்கல் இராகத்துடன் பயணிக்கும் சிற்றோடை போல அவளது வாழ்வும் மெல்லினங்களுக்கும் வல்லினங்களுக்கும் இடை நடுவில் அசைந்தாடிச் சென்று கொண்டிருந்தது.

ஒட்டுமொத்த செல்லங்ககளையும் அள்ளிக் கொட்ட ஒரே ஒரு வாப்பா.
இடைக்கிடை செல்லமாக திட்டிக் கொள்ள உம்மா.
அரட்டைக்கும் குரட்டைக்கும் என்றே எழுதிக் கொடுக்கப்பட்ட பல்கலைக்கழக அறை. அதில் அடிக்கும் ஆயிரம் கும்மாளங்கள்.
பட்டாம்பூச்சி மனது. அந்திநேர தேநீர் விருந்து.
அவ்வப்போது எட்டிப் பார்த்து இதயத்தில் இரும்பாணியைச் சொருகும் சோகங்கள்
என்று வாழ்க்கைய யதார்த்தத்தில் கரைந்த பதார்த்தமாகவே பல்லக்கில் உட்கார்ந்து பவனி வந்து கொண்டிருந்தது. ஆனால், ஆனால், அந்த இரண்டு கனவுகள் தேடி வந்து அவளது ஒட்டுமொத்த நொடிகளின் மீதும் நெருப்புத் தனல்களை அள்ளிக் கொட்டும் வரை… அவளது சின்ன உயிரின் நரம்புகளை அறுத்தெறியும் வரை.. அவளது சுவாசக் குழாயின் அடித்தளத்தில் நச்சு இரசாயணங்களை விதைக்கும் வரை.. அவளது புன்னகைகளுக்கு புண்களால் பூட்டும் போடும் வரை.. தூக்கத்தின் மத்தியில் காணும் கனவுகள் இவ்வளவு கொடூர கல்நெஞ்சங் கொண்டு கொன்று எறியும் என அவள் அது வரை அறிந்திருக்கவில்லை.


அன்று அழகான இரவு
விடிந்தால் வெள்ளிக் கிழமை
தூக்கத்திலிருந்து திடீரென திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள் அம்னா.
ஒட்டுமொத்த விடுதியுமே மொத்தமாய் தூங்கி வழிந்து கொண்டிருந்தது. பத்து நாள் பசி போட்ட நீர் யானை போன்று வாயை அகலத் திறந்தவாறு படுத்துக் கொண்டிருந்த லீனாவின் குறட்டைச் சத்தம் பல கட்டில்களைக் கடந்து வந்து காதுக்குள் கர்ண கொடூரமாய் கரகரத்துக் கொண்டிருந்தது. அப்ராவையும் ஹப்ஸாவையும் கட்டில்களில் காணவில்லை.

வழமையான சமாச்சாரம்தான்.

தண்ணீரில் தன்னை ஒட்டுமொத்தமாக நனைத்துக் கொண்டு அப்ரா தொழுகைப் பாயில் விழுந்து கிடப்பாள். ஹப்ஸா இன்னொரு மூலையில் ஒதுங்கி ‘அவளின் அவனோடு’ கிசுகிசுக் கொண்டோ சண்டை பிடித்து விம்மியழுது கொண்டோ இருப்பாள்.
சற்றுத் தொலைவில் அரைகுறை வெளிச்சமொன்று தெரிந்தது. அது கீதா. தொலைபேசி டோச்லைட் வெளிச்சத்தில் ‘ஆநபi’ நூடுல்ஸ் செய்து கொண்டிருக்கும் வெளிச்சம்தான் அது. அவள் அப்படித்தான். எல்லோரும் தூங்கிவிட்ட பின்னர்தான் அவளுக்கு பேய்ப் பசி வரும். நள்ளிரவுகளிலும் அதிகாலைப் பொழுதுகளிலும் உணவில் வாசனை மூக்கைத் துளைத்தால் அச்சப்படத் தேவையில்லை. கீதா எதையோ விழுங்கிக் கொண்டிருக்கின்றாள் என நினைத்துக்கொள்ளலாம். மறுபக்கம் பாத்ரூமில் கறுப்பு – வெள்ளைக்கால பாடல் ஒன்று ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அது தீபா.. எப்போதெல்லாம் அவளுக்கு தூக்கம் கலைகின்றதோ உடனே ஓடிச் சென்று பாத்ரூம் கண்ணாடியில் தன்னைத் தானே இரசித்துக் கொண்டு ஏதாவது கிரீமை தடவிக் கொண்டிருப்பாள்.
அம்னா கண்களைக் கசக்கிக் கொண்டு கடிகாரத்தைப் பார்க்க நேரம் நள்ளிரவு ஒன்று எனக் காட்டியது. இன்னும் விடிய அதிக நேரம் இருக்கின்றது என்பதால் இரவின் மௌனம் நிசப்தத்தில் மொத்தமாக நனைந்திருந்தது.
அம்னாவுக்கு ஏன் தூக்கம் கலைந்தது என்று தெரியவில்லை. திரும்பவும் தூங்குவதற்காக கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாலும் தூக்கம் அவளைத் தழுவாமல் தள்ளி நின்று வேடிக்கை காட்டியது.

மெதுவாக போர்வையை தூக்கியெறிந்து விட்டு வாசலுக்கு வந்தாள்.
திருட்டு நிலா குருட்டு இருட்டுக்குள் உட்கார்ந்து முரட்டுக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தது.
இரவு எப்போதுமே எல்லாருக்குமே அழகுதான்.
நேசிக்கப்படாதவர்களையும் நேசித்தவர்களை இழந்தவர்களையும் தவிர.

விடிந்தால் விடுமுறை
பத்து மணியோடு அனைத்து விரிவுரைகளும் முடிந்துவிடும். அனைத்து விரிவுரைகளும் என்றால் உள்ளது இரண்டே இரண்டு விரிவுரைகள்தான். இறுதியாக பவித்திரா டீச்சர்தான் கையில் பென்னம் பெரும் துணிப்பையோடு வருவார். எப்படியும் அவர் தனது சொந்தக் கதை சோகக்கதை எல்லாம் கொட்டித் தீர்த்து விட்டு பாடத்தில் நுழைய கால் வைக்கும்போது அவரது கைகால்களில் விழுந்து அரை மணித்தியாலத்திற்கு முன்னரே தப்பியோடி வந்துவிட்டால் அதைப் போன்ற ஆனந்தம் வேறு இருக்காது. குடுகுடுவென ஹொஸ்டலுக்கு ஓடி வந்து ஏற்கனவே அள்ளித் திணித்து வைத்திருக்கும் பையை தோளில் போட்டுக் கொண்டு தோழிகளுக்கு சொல்லி விட்டு புகையிரத்தில் ஏறினால் போதும்.


புகையிரதம் நிறுத்தும் இடத்தில் ஒரு ஜீவன் கண்கள் முழுக்க நேசத்தோடு அவளுக்காக காத்துக் கொண்டிருக்கும்.
இந்த உலகில் அவளை வேறு யாரும் நேசிக்காத அளவு நேசிக்கும்.. அவளது சின்னச் சின்ன விருப்பங்களை நிறைவேற்ற ஒவ்வொரு நொடியையும் உயிர் உருக்கி பாடுபடும்.. அவளின் ஆசைகளுக்காக எந்தவொன்றையும் தியாகம் செய்ய தயங்காத அந்த ஜீவனைக் கண்டவுடன் இத்தனை தூரம் பயணம் செய்த மொத்தக் களைப்பும் ஒற்றை நொடியில் மொத்தமாய் கரைந்து போய்விடும்.

அந்த ஜீவன் – அவளது வாப்பா

இதற்கு மேல் இங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நாளை பவித்திரா டீச்சரின் பாடத்திற்கு தூங்கித் தூங்கித்தான் வழிய வேண்டும் என நினைத்தவள் மெதுவாக கட்டிலுக்குச் சென்று படுக்கையில் சாய்ந்தாள். மெதுமெதுவாக தூக்கம் அவளைத் தழுவ முனைந்தது.
இரு விழிகளும் மெதுவாய் மூடும் பொழுதில்…
கனவொன்று விரிகின்றது.

ஒரு நீண்ட புகையிரம்.

அதன் நீளத்தை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவு நீண்டு கொண்டே செல்கின்றது. ‘இவ்வளவு பெரிய புகையிரதத்தை எனது வாழ்க்கையிலேயே கண்டதில்லையே’ என்று ஆச்சரியப்பட்டவாரே அம்னா அதன் ஒவ்வொரு பெட்டியாக பார்த்துக் கொண்டு செல்கிறாள். அட, அனைத்துப் பெட்டிகளும் காலியாகவே இருக்கின்றன. எதற்குள்ளும் யாரும் இல்லை. ஆனால், ஒரு பெட்டிக்குள் மட்டும் யாரோ ஒருவர் உட்கார்ந்திருக்கின்றார். யார் என்று கண்களை சுருக்குக் கொண்டு உற்றுப் பார்த்தால் அது அவளது வாப்பா. அவர்தான் அங்கே சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றார். அவரது சட்டை முழுக்க இரத்தத்துளிகள் தெரித்திருக்கின்றன.
வாப்பா ஏன் இங்கு உட்கார்ந்திருக்கின்றார் என்று அவளுக்குப் புரியவில்லை.

‘என்ன வாப்பா உங்களுக்கு நடந்த, ஏன் சேர்ட் முழுக்க இரத்தம்?’ என்று அவள் அப்பாவியாய்க் கேட்க வாப்பாவின் கண்களில் இருந்து கண்ணீர்ச் சொட்டுக்கள் மட்டும் பதிலாய் வந்து விழுகின்றன. ஆனால், வாப்பா பேசவில்லை. அதற்குள் புகையிரதம் புறப்படத் தொடங்கிவிட்டது.

பாவம் அம்னா

அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே படிக்கட்டின் அருகே ஓடிச் சென்று அவளும் ஏறப் பார்க்கின்றாள். ஆனால், அவளால் முடியவில்லை. எவ்வளவு முயன்றும் படிக்கட்டுக்களில் கால் கூட வைக்க முடியவில்லை. பின்னர், திரும்பவும் வந்து வாப்பாவைப் பார்க்க அவரைக் காணவில்லை. ஒவ்வொரு பெட்டியாக ஓடிச் சென்று வாப்பாவைப் தேடுகின்றாள். ஆனால், ஒரு பெட்டியில் கூட வாப்பா இல்லை.
ஆனால், இறுதிப் பெட்டியில் யாரோ ஒருவரின் சடலம் இருக்கின்றது. வெள்ளைத் துணியால் போர்த்தி வைத்திருக்கின்றார்கள். பெட்டி முழுக்க புகை நிரம்பியிருந்ததால் அது யாருடைய சடலம் என்று பார்க்க முடியவில்லை.
‘ஏன்ட தங்க வாப்பா!’ என வீரிட்டு அலறியவாறே எழுந்து உட்கார்ந்தாள் அம்னா,
ஒட்டுமொத்த உடலும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது. இடப் பக்க நெஞ்சு தாங்க முடியாமல் வலித்தது. கண்ணீர் இப்போதும் வழிந்தோடிக் கொண்டிருந்தது. வாய்க்கும் நெஞ்சுக்கும் இடையே ஏதோ அடைத்துச் கொண்டது போல வலித்தது. மூச்சுவிட முடியவில்லை. தலை பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. இன்னும் அவளால் அந்தக் கனவிலிருந்து வெளியே வர முடியவில்லை.

கனவுதான். அதற்காக இவ்வளவு பயங்கரமாகவா இருக்க வேண்டும்?
‘என்ன அம்னா, என்ன நடந்தது’ வந்து சேர்ந்தாள் அப்ரா. தொழுகைப்பாயில் உட்கார்ந்திருந்த அவளுக்கு அம்னாவின் அலறல் கேட்டிருக்க வேண்டும். அம்னாவால் அவளது கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. இல்லலையில்லை. வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். இடைக்கிடை மட்டும் அவளது வாயில் இருந்து ‘வாப்பா, வாப்பா’ என வந்து கொண்டிருந்தது.
என்ன நடந்திருக்கும் என அப்ரா யூகித்துக் கொண்டாள். ஏதேதோ துஆக்களை ஓதி ஊதியவள் ஆறுதல் சொல்லி படுக்க வைத்துவிட்டு சென்றுவிட்டாள். ஆனால், அந்த வாப்பாவின் செல்ல மகளுக்கு எப்படித் தூக்கம் வரும். கண்களை மூடினாலே இரத்தத் துளிகள் தெறித்திருந்த வாப்பாவின் சேர்ட்தான் முன்னால் வந்து நின்றது. போதாக்குறைக்கு புகைக்குள் வைத்திருந்த யாரோ ஒருவரின் சடலம் வேறு.. அது வாப்பாவாக இருக்குமோ என்று நினைத்துப் பார்க்கக் கூட அவளால் முடியவில்லை.
எப்பாடுபட்டோ திரும்பவும் தூக்கத்தை தேடிப்பிடித்து தன் மீது போர்த்திக் கொண்டு தூங்க முயன்றாள் அம்னா. எவ்வளவு நேரம் சென்றது என்று தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அழுது களைத்துப் போயிருந்த அவளது கண்கள் மூடிக் கொண்டன.
ஆனால், நீண்ட நேரம் செல்லவில்லை.
திரும்பவும் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள் அம்னா. உடலெல்லாம் மொத்தமாக வியர்த்து விட்டது. தாங்க முடியாமல் அவளது மெல்லிய மனது வலித்தது. வாய்விட்டே அழ ஆரம்பித்துவிட்டாள்.
திரும்பவும் இன்னொரு பயங்கரக் கனவு. முதல் கண்டதை விட அதி பயங்கரமான கனவு. கொஞ்சம் கூட மனசாட்சியற்ற கனவு.

அது அம்னாவின் வீடு

அம்னாவும் வாப்பாவும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். திடீரென்ற வாப்பா தேனீர்க் கோப்பையை தூக்கி வீசிவிட்டு எழுந்து தன் அறைக்கு ஓடிச் செல்கின்றார். எதுவும் புரியாமல் அம்னாவும் பின்னால் செல்கின்றாள். கொடியில் இருந்த தனது ஆடைகள் அனைத்தையும் வாப்பா சேர்த்தெடுத்து தனது பைக்குள் திணித்துவிட்டு எங்கோ செல்ல புறப்படுகின்றார். அம்னாவும் பின்னால் சென்று ‘எங்க வாப்பா போகப்போறீங்க… எங்க வாப்பா போகப் போறீங்க’ என்று திரும்பத் திரும்ப கேட்கின்றாள். ஆனால், வாப்பா பதில் சொல்லவும் இல்லை. திரும்பிப் பார்க்கவும் இல்லை. ஏதோ பதற்றத்தில் என்னன்னமோ செய்து கொண்டிருக்கின்றார்.
அம்னாவுக்கு தாங்க முடியவில்லை.
வாப்பாவின் கைகளைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி ‘வாப்ப நான் பேசுறது உங்களுக்கு விளங்கல்லயா? ஏன் என்னோட பேச மாட்டேங்குறீங்க. எங்கப் போகப் போறீங்க’ என்று கேட்கிறாள்.
வாப்பா இப்போதும் பேசவில்லை. ஆனால், அவரின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகின்றது. எங்கோ பார்த்தபடி தனது பையை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக புறப்படுகின்றார். அப்போது அங்கே பஸ் ஒன்று வர ஓடிப்போய் அதில் ஏறி அமர்ந்து கொள்கின்றார். அம்னாவும் விட்டுவிடாமல் பின்னால் ஓடிச் செல்கின்றாள். ஆனால், அவளால் பஸ்ஸுக்குள் ஏற முடியவில்லை. எவ்வளவுதான் முயற்சித்தாலும் பஸ்ஸை நெருங்கக் கூட முடியவில்லை. ஆனால், வாப்பா ஜன்னலால் எட்டிப் பார்க்கின்றார்.
‘மகள் அழாம இருங்கோ… நான் போறேன்’ என்று சொல்லிவிட்டு அவர் தலையை எடுக்க பஸ் புறப்படுகின்றது. அம்னாவும் வாப்பா… வாப்பா… என அழுதுகொண்டு பின்னால் ஓட… பஸ் ஓடி மறைந்துவிடுகின்றது.
இடைநடுவில் யாரோ அவளது தோளைத் தொடுகின்றார்கள். திரும்பிப் பார்க்க, அங்கே அவளது வாப்பா நின்று கொண்டிருக்கின்றார். ‘நான் மௌத்தாகப் போறன் மகள். நீ பத்திரமாக இருந்துக்கோ..’ என்று சொல்லிவிட்டு மறைந்துவிடுகின்றார்.
புகையிரதம் தன் பாட்டுக்கு அசைந்தாடியபடி சென்று கொண்டிருந்தது.
ஜன்னலோரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் அம்னா. மனம் முழுக்க இரவு கண்ட – ஒன்றன் பின் ஒன்றாக தன்னை சித்திரவதை செய்து கொன்று போட்ட கனவுகளைப் பற்றியே அசைபோட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கனவுகள் நினைவு வரும்போதெல்லாம் கண்களுக்குள் இருந்து உயிர் நீர்க்கரைசலாக மாறி அவளது கன்னங்களில் வழிந்தோடுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
எவ்வளவு அகோரமான கனவுகள். மனதில் கொஞ்சம் கூட ஈவிரக்கமற்ற கனவுகள். ஒருவேளை வாப்பாவுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்ற சிந்தனை எட்டிப் பார்த்தது. அவளால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. கண்கள் குளமாகி வடிகான்கள் நிறைந்தோடின. நெஞ்சு வலிக்க ஆரம்பித்துவிட்டது. வாப்பா இல்லாத வாழ்வை யாராலும் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை.
மெதுவாக சாய்ந்து வலுக்கட்டாயமாக கண்களை மூடினாள் அவள். மூடிய கண்களுக்குள் வாப்பா ஈரமாக புன்னகைத்தார்.

இந்த உலகில் அசைக்க முடியாத ஓர் உறவு என்றால் அது வாப்பா மகள் உறவுதான். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எத்தனை சச்சரவுகள் எட்டிப் பார்த்தாலும் அந்த இரும்புச் சுவற்றின் ஓர் அங்குலத்தைக் கூட அசைத்துப் பார்க்க முடியாது. எத்தனை ஆழமான ஆயிரம் நேசங்களாலும் உறவுகளாலும் கூட அதில் அணுவளவும் ஈடு செய்ய முடியாது.
தனது செல்ல மகள் தரும் ஈர முத்தங்களை விட மிகப் பெரிய ஆனந்தங்கள் எதுவும் வாப்பாக்களுக்கு இருக்கப் போவதில்லை. தனது உணவுத் தட்டில் அலைந்து அலைந்து எச்சில்படுத்தி அவள் ஊட்டிவிடும் ஒரு கவளத்தை விட ருசியான உணவை வாப்பாக்கள் எங்கும் சுவைத்திருப்பதில்லை.
தனது செல்ல மகளை முதன் முதலாக தூக்கும் தந்தையின் இரு கண்களை கவனித்திருக்கின்றீர்களா.. அப்பப்பா.. என்னவொரு ஆனந்தமான கர்வம் அது. என்னவோ இந்த பரந்த உலகில் தனக்கு மட்டும்தான் மகள் பிறந்திருப்பதாக ஆனந்தித்துக் கொள்வார். மகளை அள்ளியெடுக்கும் போது அவரது கைகளில் விரவிப் பரவும் நடுக்கத்தை கண்டிருக்கின்றீர்களா! அவரது விழியோரம் எட்டிப் பார்க்கும் ஆனந்தக் கண்ணீரின் அடர்த்தியை அவதானித்திருக்கின்றீர்களா!
பாலர் பள்ளி வாசலில் தனது செல்ல மகளுக்காக கால்கடுக்க காத்திருக்கும் தந்தைமாரின் கண்களை உற்றுப் பார்த்தால்… தனது மகள் பெரிய பிள்ளையாகிவிட்டாள் என்ற செய்தியை கேள்விப்படும் தந்தையின் விழிகளைப் பார்த்தால்… திருமண நாளில் இன்னும் சில நிமிடங்களில் தன் மகள் இன்னொருவனின் கைபிடித்து வீட்டை விட்டுச் செல்லப் போகிறாள்.. இனி இந்த வீட்டில் அவளின் அரட்டைகளோ.. அட்டகாசங்களோ இருக்காது என்பதை நினைத்து அடக்க முடியாத அழுகையோடு போராடும் அப்பாக்களைக் கண்டால்.. ஹ்ம்.. எத்துணை ஆழமான அர்த்தம் கொண்டது இந்த வாப்பா மகள் பாசம்.

திடீரென அம்னாவுக்கு அந்தச் சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.
அப்போது அம்னாவுக்கு பத்து வயது இருக்கும்.
வாப்பா தையல் கடை வைத்திருந்தார். அதற்கு அருகேதான் வாப்பாவின் கோழிக் கூடு அமைந்திருந்தது. கோழி, முயல், காடை, கிளி, மீன், பூனை.. என அம்னாவின் வீட்டில் சிறிய ணுழழ ஒன்றே இருக்கும். அதில் வாப்பாவுக்கு ரொம்பப் பிடித்தது அந்தக் கோழிகள்தான். மொத்தம் இருபத்தொரு கொக்கரக்கோ கோழிகள். அவற்றுக்கு மத்தியில் நடுநாயகமாக ஒரே ஒரு சேவல். அதிகாலையில் சூரியன் எழுந்து முகம் கைகால் கழுவிக் கொண்டு ஒரு தேநீரையும் அருந்திவிட்டு வேலைக்கு வருவதற்கிடையில் இந்த சேவல் மட்டும் தன் அலறலால் ஒட்டுமொத்த ஊரையே எழுப்பி விடும். வீட்டு வளவுக்குள் எந்தக் கோழியோ, சேவலோ அத்துமீறி நுழைந்தாலும் சேவலின் கண்களில் இருந்து தப்பிக்க முடியாது. அது விரட்டுக்கின்ற விரட்டில் இனி ஜென்ம ஜென்மத்துக்கு யாரும் இந்தப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டார்கள். இது தெரியாத நல்ல பாம்பு ஒருவர் ஒரு நாள் முகவரி மாறி இந்தப் பக்கம் எட்டிப் பார்த்து விட்டார். போதாக்குறைக்கு நமது சேவலின் கண்களில் பட்டுவிட்டார். ஐயோ பாவம். சேவல் விரட்டி விரட்டி கொத்திய கொத்தில் ‘என்னை யாரும் தேட வேண்டாம்’ என்று காயிதம் எழுதி வைத்துவிட்டு ஊரையே காலி செய்துவிட்டு போய்விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்…!
அதிகாலையில் வாப்பா எழுந்தவுடன் முதலில் ஓடுவது அந்தக் கோழிக் கூட்டுக்குத்தான். நான்கு கோழியாவது முட்டையிட்டிருக்கும். கண்ணில் விழுந்த தூசை எடுக்கும் பரிபக்குவத்தோடு அந்த முட்டையை எடுத்து பத்திரப்படுத்தி விட்டுத்தான் வாப்பா அடுத்த வேலையைப் பார்க்கப் போவார்.
பச்சைக் கொச்சிக்காயும் வெங்காயமும் சமமாகக் கலந்து தேங்காய் ரொட்டி செய்து அதனோடு கருகருவென பொரித்த முட்டைதான் அம்னாவுக்கு அதிகமான நாள் பாடசாலைக்கு காலைச் சாப்பாடு. எப்படியும் வாரத்தில் இரு நாட்களாவது பகல் கறிக்குக் கூட அவித்த முட்டையொன்று அவளுக்காகக் காத்திருக்கும். தனது மகளுக்கு சரியான ஊட்டச் சத்தை வழங்க வேண்டும் என்ற விசயத்தில் வாப்பா அதி கவனமாக இருந்தார்.

அன்று சனிக்கிழமை

வாப்பா தனது தையல் வேலையில் மும்முரமாக இருந்தார். அவர் பென்னம் பெரிய இரும்புக் கத்தரிக் கோலால் துணிகளை வெட்டும் லாவகத்தை இரசித்துக் கொண்டிருந்த அம்னா ஏதோ வேலைக்காக வெளியே வந்தாள்.
எதிரே கோழிக் கூடு
ஏதாவது கோழி முட்டையிட்டிருக்குமா என்ற நினைப்பில் கையை உள்ளே நீட்டினாள். மெல்லிய விரல்களில் முட்டை தட்டுப்பட்டது. ஆனால், தனது முட்டையை யாரோ எடுப்பதை கொக்கரித்துக் கொண்டிருந்த கோழியும் பார்த்து விட்டது. அது சும்மா இருக்குமா? தனது ஒட்டு மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி பயங்கரமாக ஒரு கொத்து கொத்திவிட்டது.
இத்தோடு கதை முடிந்திருக்கலாம்.
கொத்து வாங்கிய அம்னா பயத்தில் பதறியோடத் தொடங்கினாள். எதிரே நின்ற ஆட்டாவைக் கவனிக்கவில்லை. ஓடி வந்த வேகத்தில் அதில் மோதி மல்லாக்க விழுந்து விட்டாள்.
மகளின் அலறல் சத்தம் கேட்ட வாப்பா ஓடி வந்து பார்க்க… விம்மியழுது கொண்டிருந்த அம்னாவின் நெற்றியிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இத்தனை சம்பவங்கள் நடந்த பின்பும் கொஞ்சம் கூட மனம் இரங்காத அந்த கொக்கரிக்கும் கோழி அம்னாவைக் கொத்துவதற்காக சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது. அவளோ பயத்திலும் வலியிலும் அலறிக் கொண்டிருந்தாள்.
வாப்பா மெதுவாக அம்னாவைத் தூக்கினார்.
நெற்றியில் வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை மெதுவாகத் துடைத்தார்.
ஆறுதல் சொல்லி உள்ளே கூட்டிக் கொண்டு சென்றார்.
அடுத்த நாள் அம்னா வெளியே வந்து பார்க்க கோழிக் கூட்டைக் காணவில்லை. சூறாவளிக் காற்றுக்கு அகப்பட்ட கடதாசிக் குப்பை போன்று சிதறிக் கிடந்தது அது. தனது ஒட்டுமொத்த கோழிகளையும் அரை விலைக்கு விற்றுவிட்டார் வாப்பா. கோழிகளை மட்டுமல்ல. முயல், காடை, கிளி, பூனை என ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் காலி செய்து விட்டு தன் செல்ல மகளுக்குப் பிடிக்குமே என்று மீன் தொட்டியை மட்டும் மிச்சம் வைத்திருந்தார். தன் மகளை அலற வைத்த எழுவுமே மிஞ்சியிருக்கக் கூடாது என்ற வெறியில் அனைத்தையும் தூக்கி கடாசியிருந்தார்.

உம்மாவுக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது. கொஞ்சம் என்றால்…

இரவுச் சாப்பாட்டுக்கு பின் வாப்பாவின் மடியில் அம்னா தலை வைத்து படுத்துக் கொண்டிருந்தாள். வாப்பாவின் இரும்புக் கை மயிலிறாகாய் அவதாரம் கொண்டு அவளது கேசத்தை வருடி விட்டுக் கொண்டிருந்தது. இடைக்கிடை கோழி கொத்திய காயத்தையும் கலங்கும் விழிகள் கழிவிரக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன.
‘ஒரு கோழி கொத்தினதற்காக எல்லாத்தையும் வித்திட்டீங்களே… உங்களுக்கு என்ன கிறுக்கு புடிச்சிட்டா’ என்று உம்மா முனங்கினார்.
வாப்பா புன்னகைத்தார்.
‘என் செல்ல மகளுக்குக் கொத்தினால்… பார்த்துக் கொண்டு சும்மா இருக்க ஏலுமா!| என்றார்.
‘இருந்தாலும் இவ்வளவு பாசம் இருக்கக் கூடாது. அவள் பிறந்த பிறகு என்னைக் கண்டு கொள்றதே இல்ல. நாளைக்கே அவள் வளர்ந்து பெரியாளாகி இன்னொருத்தன்ட கையை பிடிச்சிட்டு போன பிறகுதான் உங்க கண்ணுக்கு நான் தெரிபடுவன் போல’ என்றார் உம்மா நக்கலாக…

உம்மா நக்கலாகத்தான் சொன்னார். ஆனால், வாப்பாக்கு ரொம்பவுமே வலித்துவிட்டது. ஒரு நாள் தனது செல்ல மகள் தன்னை விட்டுப் போவாள் என எதிர்பார்க்கவில்லை. இத்தனை நேரமாய் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அணை கடந்து வழியத் தொடங்கிவிட்டது. உம்மாவுக்கும் சங்கடமாவிட்டது. எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் வாப்பாவை சமாதானப்படுத்த முடியவில்லை.
அன்று இரவு சாப்பிடாமலேயே தூங்கப் போனார் வாப்பா.
ஆனால்,
எப்படித் தூக்கம் போகும்!!

புகையிரதம் நின்று விட்டது.
தனது செல்ல மகளுக்காக கையில் குடையோடு காத்திருந்தார் வாப்பா. அவரை கட்டியணைத்து நெற்றி முத்தமொன்றை பெற்ற பின்னர்தான் இத்தனை நேரமாக உயிருக்குள் பற்றியெரிந்து கொண்டிருந்த தீ கொஞ்சம் அணைந்தது.

(தொடரும்)

One response to “ஒரே ஒரு மகள் அத்தியாயம் 02”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

ஸகாத்தை வாரி வழங்குவோம் வள்ளல்களாக மாறுவோம்

Fayasa Fasil இஸ்லாத்தின் கடமைகளில் மூன்றாவது கடமையை ஸகாத். ஸகாத் என்பது மொழியில் வளர்ச்சி ,தூய்மை , சீர்மை , பரக்கத் போன்ற பல கருத்துக்களை தருகின்றது.…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 05)

திருமணம் முடிந்துவிட்டது. இரவாகிவிட்டது. தோழிகளின் கிண்டல் பார்வைகளையும் நக்கல் பேச்சுக்களையும் நையாண்டி சைககைகளையும் சகித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அம்னா. கல்யாண பரபரப்பில் அஸ்ஜத்துடன் எதுவும் பேசக்…

மேலும் வாசிக்க

இலங்கையின் கல்வித்துறை – போட்டிப் பரீட்சைக்கான தகவல்கள் (01)

இலங்கையின் கல்வித் துறை பற்றி சில முக்கியமான தகவல்களை இந்த அத்தியாயம் முன் வைக்கின்றது. (01 - 100) பகுதி 1: இலங்கை கல்வித் துறையின் வரலாற்றுப்…

மேலும் வாசிக்க

தமிழ் என்றும் வாழும்

தமிழ் மொழியின் வரலாறு உலகின் மிகப் பழமையான மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழியாகும். அதேபோன்று காலத்திற்குக் காலம் ஏற்பட்ட அழிவுகள், போர்கள், ஆக்கிரமிப்புக்கள் அனைத்தையும் வென்று 'காலத்தை…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 04)

அம்னாவுக்கு திருமணப் பேச்சு ஆரம்பமாகிவிட்டது. ஒரு பெண்ணின் வாழ்வில் திருப்புமுனையான அம்சம் திருமணம்தான். அது அற்புதமாய் அமைந்துவிட்டால் அதைவிட பெரிய அதிர்ஷ்டம் அவளுக்கு வாய்க்கப் போவதில்லை. அதில்…

மேலும் வாசிக்க

2026 – ஒரே நாளில் Passport எடுப்பது எப்படி? (One Day Service)

ஒரு காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை விசித்திரமாக பார்ப்பது போன்று இன்று பாஸ்போர்ட் (Passport) இல்லாதவர்களை விநோதமாக பார்க்கும் வழக்கம் தோன்றியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில்…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் அத்தியாயம் 03

அம்னா பல்கலைக்கழகத்திலிருந்து வந்து ஒரு வாரம் கழிந்து விட்டது. இன்னும் வகுப்புக்கள் ஆரம்பிக்க பத்து நாட்கள் இருந்தன. அன்று அவளின் பிறந்த நாள். அந்தி சாய்ந்து கொண்டிருந்தது.…

மேலும் வாசிக்க

பெற்றோருக்காய் ஒரு நிமிடம்..!

Fayasa Fasil தாயின் கருவறையில் பத்திரமாய் பவ்வியமாய் ஒரு சிசு வளர்கிறது நிம்மதியான உறக்கம் கொண்டு தன் செயற்பாட்டை அமைத்துக் கொண்டு செயல்படுகிறது. வெளியுலகை எட்டிப் பார்க்கும்…

மேலும் வாசிக்க

மன்னிப்பின் மாதம்

இரண்டு வயது ஆண் குழந்தைஅய்லன் ரூமி…மலப்புறம் (India) மாவட்டத்தை சேர்ந்தசர்புதீன் - சஃப்னா தம்பதியர் மகன்..இருவருக்கும் திருமணம் முடிந்துஎட்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும்…

மேலும் வாசிக்க

Fiverr வீட்டில் இருந்தவாரே டொலர் மழையில் குளிக்கலாம்!

இன்றைய காலத்தில் பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. இல்லானை இல்லத்தவளும் வேண்டாத.. ஈன்றெடுத்த…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள